/indian-express-tamil/media/media_files/2024/12/16/vBniJFiYGNsqhfozzTeK.jpg)
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்திற்குள் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வெளியான “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்றிரவு (டிசம்பர் 15) நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மாநிலங்களவை உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது, இளையராஜா மற்றும் ஆண்டாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் ஆகியோருக்கு மேள தாளங்கள் முழங்க கோயில் யானையை அழைத்து வந்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இளையராஜா ஆண்டாள் ரெங்கமன்னாரை தரிசனம் செய்ய அர்த்த மண்டபத்திற்குள் ஜீயருடன் செல்ல முற்பட்டார். அப்போது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை அர்த்த மண்டபத்திற்கு வெளியே நிற்குமாறு கூறினர். இதனையடுத்து வெளியே நின்ற இளையராஜாவுக்கு அர்த்த மண்டப நுழைவு வாயிலில் வைத்து மரியாதை அளித்தனர். அதன்பின் இளையராஜா வெளியே வந்து நின்று சாமி தரிசனம் செய்தார். மேலும் “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியையும் கண்டு களித்தார்.
இதற்கிடையே, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அர்த்தமண்டபத்திற்குள் செல்ல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் ஊடகங்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆண்டாள் கோயிலில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தையும் கருவறை போன்றே பாவித்து வருகிறோம். எனவே அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களைத் தவிர பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. சம்பவத்தன்று ஜீயருடன் இளையராஜாவும் அர்த்த மண்டபத்திற்குள் தவறுதலாக நுழைந்ததார் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.