விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக 2 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தவர் இன்று மருத்துவமனையில் காலமானார்.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சிக்கு 20 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டது. அதில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாதவராவ் என்பவர் வேட்பாளராக போட்டியிட்டார்.
மாதவராவ் எம்.பி.ஏ படித்தவர். காங்கிரஸில் விருதுநகர் மாவட்ட மாணவரணி செயலாளர், மாநில மாணவரணி துணைத் தலைவர், இளைஞரணி செயலாளர், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் போன்ற பல்வேறு பதவிகளை காங்கிரஸ் கட்சியில் வகித்தவர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த இரண்டு வாரங்களாகவே அவர் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக இறுதிக்கட்ட பிரசாரத்தில் நேரடியாக அவரால் ஈடுபட முடியவில்லை. அவருக்குப் பதிலாக அவரது மகளே பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மாதவராவ் மருத்துவமனையிலே உயிரிழந்தார்.
இவருக்கு காங்கிரஸ் கட்சி தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும், ஒருவேளை மாதவராவ் வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் நடக்கும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil