விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் லைசென்ஸ் உரிமத்துடன் ஜெயந்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் ஜெயராஜ் என்பவரிடம் ஒப்பந்தத்திற்கு கண்ணன் என்பவர் பட்டாசு ஆலையை எடுத்து நடத்தி வந்துள்ளார். இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தனித்தனி அறைகள் உள்ளன.
இந்நிலையில், பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து பொருட்கள் தனித்தனி அறைகளில் குவித்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பட்டாசு தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் மல்லி, மானகசேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை அவர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்து பட்டாசு தயாரிப்பை தொடங்கினர். முதலில் வெடிமருந்து கலவை பணிகள் நடைபெற்றன. பின்னர் பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து மற்றும் மூலப்பொருட்கள் ஒரு வாகனத்தில் வந்துள்ளது. அதனை தொழிலாளர்கள் இறக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக உராய்வால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அடுத்த விநாடி அருகில் இருந்த கட்டிடங்களிலும் தீ பரவி 5-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமானது.
இந்த விபத்தில் புலிக்குட்டி மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், யாராவது இந்த விபத்தில் சிக்கி உள்ளார்களா? என்றும் ஆய்வு செய்து வருகிறார்கள். மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“