ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம் என்பவர் கும்பாபிஷேக பணிக்கு வந்த பிற அர்ச்சகர்களோடு இணைந்து மது அருந்திவிட்டு வீட்டில் ஆபாசமாக ஆடிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இது குறித்து ஸ்ரீவில்லுபுத்தூர் காவல் நிலையத்தில், அர்ச்சகர் கோமதி விநாயகம் புகாரளித்துள்ளார். அதில், கும்பாபிஷேக பணியை பொறுப்பேற்று நடத்தி வரும் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக சம்பந்தப்பட்ட வீடியோவை வெளியிட்ட சபரிநாதன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றொரு புறம், ஸ்ரீ ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் சக்கரை அம்மாளிடம் இச்சம்பவம் குறித்து இந்து முன்னணி மாவட்ட தலைவர் யுவராஜ் புகாரளித்துள்ளார். அதன்பேரில், சம்பந்தப்பட்ட வீடியோவில் குடிபோதையில் நடனமாடிய அர்ச்சகர்கள் அனைவரையும் கோயில் பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக அர்ச்சகர்கள் மூன்று பேரும் மது அருந்திவிட்டு ஆபாசமாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வந்தது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை தேடி வருகின்றனர்.