எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்வது குறித்து சிபிசிஐடி விசாரிக்க டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்தில், மே 26ல் அனுப்பிரியா எனும் மாணவி எஸ்ஆர்எம் பல்கலைக்கழக 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். மே 27ல் அனித் சவுத்ரி எனும் மாணவன் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் விடுதியில் மர்ம மரணம் அடைந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை 15ம் தேதி எஸ் ஆர் எம் பல்கலைக் கழக கட்டடத்தின் 7வது மாடியிலிருந்து குதித்து ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட மாணவன் கன்னியாகுமரியை சேர்ந்த ஸ்ரீ ராகவ் என்பதும், அவர் இப்பல்கலைகழகத்தில் பி.டெக் இறுதியாண்டு படித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இவனது சகோதரர், இதே பல்கலைகழகத்தில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
மறைமலைநகர் போலீசார், ஸ்ரீராகவின் உடலை, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல என்று ஸ்ரீராகவ் துண்டுச்சீட்டு எழுதி வைத்திருந்ததை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்வது குறித்து சிபிசிஐடி விசாரிக்க காவல்துறை டி.ஜி.பி. இன்று உத்தரவிட்டுள்ளார்.