SSLC Exam : தமிழகத்தில் பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வுகள், மார்ச் 27-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 13-ம் தேதி முடிவு பெறுவதாக இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம், கொரோனா தொற்று நிலைமையை தலை கீழாக்கி விட்டது.
குவாரண்டைனில் செவிலியர்…. ”அம்மா இங்க வா” என்று அழும் குழந்தை!
சீனாவின், வுஹான் நகரத்தில் உருவான கொரோனா வைரஸ், கொஞ்சம் கொஞ்சமாக மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. தற்போது கொரோனா தாக்காத நாடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த எண்ணிக்கை மிக சொற்பம் தான். இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவும் தப்பவில்லை. தற்போது வரை 5,274 பேர் இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதில் 411 பேர் குணமாகியிருக்கிறார்கள், 149 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை தற்போது 738-ஆக உள்ளது. இதில் 21 நபர்கள் குணமாகியிருக்கிறார்கள், 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற காரணங்களுக்காக யாரும் வெளியில் வரக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. முக்கியமாக மளிகை மற்றும் காய்கறி கடைகளில் 1 மீட்டர் இடைவெளி விட்டு நிற்கும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. கூட்டமான இடங்கள், கொரோனா வைரஸ் பரவ ஏதுவாக இருக்கும் என்பதால், கூட்டம் கூட சாத்தியக்கூறுள்ள அத்தனை இடங்களும் மூடப்பட்டுள்ளன.
டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மாஸ்க்குகள் போட்டு தான் வெளியில் வர வேண்டும் என திட்டவட்டமாக கூறிவிட்டார்கள். தமிழகத்திலும் கூட்டத்தைத் தவிர்த்து, ஊரடங்கை கடுமையாக்க, பல்வேறு விஷயங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி சேலத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை தான் மளிகை, காய்கறி வாங்க மக்கள் வெளியில் செல்ல வேண்டும், என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இத்தனை கெடுபிடிகளுக்கு இடையே கடந்த ஒரு வருடம் முழுவதும், தூக்கமின்றி படித்த 10-ம் வகுப்பு மாணவர்கள், தங்களுக்கு தேர்வு நடக்குமா? இல்லையா? என பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். லட்சக் கணக்கான 10-ம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவரையும் பாதுகாப்பாக தேர்வெழுத வைப்பது இந்த சூழலில் சவாலான ஒன்று. தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு, “இது குறித்து முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். அதே சமயத்தில் தேர்வை ரத்து செய்வது சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது. காரணம், மேற்படிப்பு, வேலை, அரசு வேலைக்கான தேர்வுகள் என எங்கு சென்றாலும், 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படை காரணியாக இருக்கிறது. இவற்றிற்கு மேலாக, 11-ம் வகுப்புக்கு செல்கிற மாணவனாக இருந்தால் ‘ஆல் பாஸ்’ பிரச்னையில்லை. ஆனால் , ஐடிஐ, பாலிடெக்னிக் போன்ற தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு மிக அவசியமான ஒன்று. பி.எட் முடித்து ஆசிரியர் தேர்வெழுதுபவர்களுக்கு, கட் ஆஃப் மதிப்பெண்ணில் 10-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்படும்.
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட 3 திறனறிவு பாடங்கள் அறிமுகம் : சி.பி.எஸ்.இ அப்டேட்ஸ்
ஒருவேளை 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தாமல், தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ளலாமா என்ற எண்ணமும் கல்வித்துறையில் இருப்பதாக தெரிகிறது. எது எப்படியோ, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த கல்வித்துறையின் திட்டத்தை மாணவர்களுக்கு தெரிவித்து விட்டால், அவர்கள் குழப்பத்திலிருந்து விடுபட பேருதவியாக இருக்கும்.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ”10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அனைத்து பணிகளுக்குமான அடிப்படையாக உள்ளது. ஆகையால் தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து, ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் நாட்கள் கடந்தாலும், நிச்சயம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும் என்பது தெளிவாகியிருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.