scorecardresearch

குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்காமல் அலைக் கழிப்பு: நரிக்குறவர் இன மக்கள் வேதனை

நரிக்குறவர் மக்களுக்கு பழங்குடியினர் என்று சாதி சான்றிதழ் வழங்க கோட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியர்களுக்கு தமிழக அரசால் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

Trichy
Trichy

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் பழங்குடியின மக்களான நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். 124 குடும்பங்களை சேர்ந்த 390 நபர்கள் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய குழந்தைகள் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் தொடக்க கல்வி முதல் உயர்நிலை கல்வி வரை அங்கு பயின்று வருகின்றனர். இவர்களுக்கு சாதி சான்றிதழ் வேண்டி துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் 21-ம் தேதி ஆன்லைன் மூலம் மனு அளித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு ஒப்புதல் கடிதத்தை வட்டாட்சியர் வனஜாவிடம் வழங்கி உள்ளனர்.

வட்டாட்சியராக பணிபுரியும் வனஜா பழங்குடி இனச் சான்றிதழ் வழங்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும், மனுவை முசிறி ஆர்.டி.ஓவிடம் அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் முசிறி சாராட்சியரை சென்று பார்க்குமாறும் மனுதாரரிடம் கூறி உள்ளார். மனுதாரர்கள் முசிறி சாராட்சியர் மாதவனை பார்க்கச் சென்றனர். ஆனால் மாதவன் மனுதாரர்களிடம் அவர்களுடைய பூர்வீக சந்ததியினர் வழித் தோன்றல் முறைகள் வேண்டும் என்று மனுதாரர்களை திருப்பி அனுப்பி உள்ளார்.

நரிக்குறவர் இன மக்களை எஸ்.டி பிரிவில் சேர்த்து சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டும் என்று விஜயன் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். மனுவை விசாரித்த ஆட்சியர், சார் ஆட்சியர் மற்றும் கோட்டாச்சியருக்கு நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழை உடனடியாக வழங்க பரிந்துரை செய்துள்ளார்.

ஆனால் இதுவரை சாராட்சியர் மாதவன் நரிக்குறவ மக்களின் 17 குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்து வருகிறார். சாதி சான்றிதழ் இல்லாததால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் தடைப்படும் என நரிக்குறவ மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு 2023 ஜனவரி 3-ம் தேதி அனைத்து வருவாய்த் துறையினருக்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைகள் திருத்தப்பட்ட சட்டம் 1976 வரிசை எண் 37-ல் நரிக்குறவர்கள், பழங்குடியினர் இன வகுப்பை சேர்ந்தவர் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளது என்பதும், நரிக்குறவர் மக்களுக்கு பழங்குடியினர் என்று சாதி சான்றிதழ் வழங்க கோட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியர்களுக்கு தமிழக அரசால் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: St caste certificate to narikuravar community

Best of Express