சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையம் சென்னையின் அடையாளம். 90-கள் வரை தமிழ் சினிமாவில் சென்னையைக் காட்ட வேண்டும் என்றால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைத் தான் காட்டுவார்கள். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், பறக்கும் ரயில், மெட்ரோ ரயில், விரைவு ரயில் என எல்லாவற்றையும் இணைக்கும் முனையமாக உள்ளது.
இந்த சூழ்நிலையில்தான், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் இந்த சிறப்பு அம்சங்களுடன் சென்னையில் இன்னொரு ரயில் நிலையமும் உருவாக உள்ளது. அது எந்த ரயில் நிலையம் என்றால், பரங்கிமலை ரயில் நிலையம்தான் அது. பறக்கும் ரயில் திட்டம் வேளச்சேரியில் இருந்து ஆதம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் பணி வரும் ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் தரைத்தளத்தில் அமையப்பெற்ற ரயில் நிலையம். அதே நேரத்தில், பரங்கிமலை - கடற்கரை வரையிலான பறக்கும் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அது முதல் தளத்தில் அமைகிறது. அடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் - பரங்கிமலை ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்டம் அமையவிருக்கிறது. இது இரண்டாவது தளத்தில் அமையும் என்று கூறப்படுகிறது.
அதே போல, மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமும், பரங்கிமலை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் திட்டமிடபப்ட்டுள்ளது.
ஆதம்பாக்கம் - பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு இடையிலான 475 மீட்டர் ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துவிட்டால், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் மற்றும் இதர பகுதிகளிலிருந்து வரும் பயணிகள், பறக்கும் ரயில் மூலம் பரங்கிமலையிலிருந்து வேளச்சேரி, அடையாறு, மயிலாப்பூர், தரமணி உள்ளிட்டப் பகுதிகளுக்குச் போய் வருவது எளிதாக இருக்கும்.
தெற்கு ரயில்வே பரங்கிமலை ரயில் நிலையத்தின் உள்கட்டமைப்புகளை அதிகரித்து, நாள்தோறும் 10,000 ரயில் பயணிகளை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. பரங்கிமலை ரயில் நிலையத்தின் தெற்கு நுழைவாயிலில் இருந்து (ஆதம்பக்கம்) அதனுடன் ஒருகிங்கிணைக்கப்பட்ட பறக்கும் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருக்கும் 5 நடைமேடைகளுக்கும் பயணிகள் எளிதாகச் சென்று வர 12 மீட்டர் அகலம் கொண்ட நடைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், 5 நகரும் படிகட்டுகளும், நடைமேடைகள், முக்கிய நுழைவாயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய கட்டடங்களுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிறகு, பறக்கு ரயில், மெட்ரோ ரயில், விரைவு ரயில் என முக்கிய ரயில் முனையாமாக மாறுவதன், மூலம், பரங்கிமலை தென் சென்னையின் முக்கிய ரயில் முனையமாக மாற்ற வேண்டும் என்றும் விரைவு ரயில்கள் பரங்கி மலை ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்ல வேண்டும் என்ற தென் சென்னை மக்களின் கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் எழுந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"