சென்னை மின்சார ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த 5 பேர் பலி! விபத்து நடந்தது எப்படி?

St. Thomas Mount Station, EMU Train Accident: பரங்கிமலை ரயில் விபத்தில் 5 பயணிகள் பலி

St. Thomas Mount Station, EMU Train Accident in Chennai: பரங்கி மலையில் மின்சார ரயில் விபத்து

St. Thomas Mount Station, Chennai EMU Train Accident: சென்னையில் இன்று மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தபோது, தடுப்புச்சுவரில் மோதி விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே தினமும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை புறநகர் மின்சார ரயில்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. அதேபோல், கடற்கரை- செங்கல்பட்டு, கடற்கரை- திருமால்பூர் இடையிலான ரயில்களும் இதே மார்க்கத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் இயக்கப்படுகின்றன. அதிக தூரம் செல்லும் இந்த ரயில்களில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

இந்நிலையில், இன்று கோடம்பாக்கம்- மாம்பலம் இடையே மின்சார ரயில் செல்லும் பாதையில் உயர் மின்னழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததால் விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் மின்சார ரயில்கள் இன்று இயக்கப்பட்டன. காலதாமதத்துடன் குறைவான ரயில்கள் இயக்கப்பட்டதால், பயணிகளின் கூட்ட நெரிசல் கடுமையாக இருந்தது.

அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் நோக்கி மின்சார விரைவு ரயில் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. இதில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் பயணித்தனர். மாணவர்கள் பலர் படிக்கட்டில் தொங்கிக் கொண்டும் பயணம் செய்தனர்.

இந்நிலையில், அந்த ரயில் பரங்கிமலை ஸ்டேஷனை நெருங்கியபோது, படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த 8 பேர், பக்கவாட்டில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி அடுத்தடுத்து கீழே விழுந்தனர். இதை சற்றும் எதிர்பாராத சக பயணிகள் அனைவரும் கூச்சலிட ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ஆனால், பள்ளி மாணவர் பரத், கல்லூரி மாணவர்கள் பிரவீன் குமார், சிவகுமார் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

அப்போது, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மற்றொரு பயணியும் இறந்தார். இதனால், பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

EMU Train accident at St. Thomas Mount railway station, Chennai

பரங்கிமலை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தின் பக்கவாட்டில் உள்ள தடுப்புச்சுவர் தான் இந்த விபத்திற்கு காரணமாக அமைந்தது. சம்பவம் இடத்தை ஆய்வு செய்த ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு, ‘இந்த தடுப்புச்சுவரை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம், பயணிகள் படிகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

படுகாயம் அடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற மூன்று பயணிகளின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து, அமைச்சர் ஜெயக்குமார் ஆறுதல் கூறினார்.

நேற்று இரவும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

விபத்து நடந்தது எப்படி?

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழியாக திருமால்பூர் வரை செல்லும் இந்த மின்சார ரயில், வழக்கமாக காலை 7.05 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்படும். ஆனால், இன்று காலை மின்வயர் அறுந்து விழுந்து தடை ஏற்பட்டதால் அந்த ரயில் 7.40 மணிக்கு புறப்பட்டது. காலை 8.25 மணிக்கு அந்த ரயில் பரங்கிமலை ரயில் நிலையத்துக்குள் வந்தது. ஆனால், வழக்கமான பிளாட்பாரத்துக்கு பதிலாக, வெளியூர்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் 4-வது பிளாட்பாரத்திற்கு திருப்பி விடப்பட்டு இருந்தது. இதுதான் இன்று காலை நடந்த விபத்திற்கு முக்கிய காரணமாகிவிட்டது.

4வது பிளாட்பாரத்திற்கும், 3வது பிளாட்பாரத்திற்கும் இடையில் இருந்த சிமெண்ட் தடுப்பு சுவரை, ரயில் பெட்டி வாசல்களில் தொங்கிக் கொண்டு வந்த பயணிகள் கவனிக்கவில்லை. ரயில், பிளாட்பாரத்தில் நுழைந்ததும் இரண்டாவது பெட்டியில் தொங்கிக் கொண்டு வந்த பயணிகளில் ஒருவரது முதுகில் தொங்கவிட்டு இருந்த பை சிமெண்ட் தடுப்பு சுவரில் மாட்டிக் கொண்டது. இதனால் அந்த பயணி நிலை தடுமாறி கீழே விழ,  அவரோடு சேர்த்து அவர் அருகில் தொங்கிக் கொண்டு இருந்த 8 பயணிகள் அடுத்தடுத்து சிமெண்ட் தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்தனர்.

சிமெண்ட் தடுப்பு சுவரில் மோதிய வேகத்தில் 2 பயணிகளின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மற்றொரு பயணி தலை நசுங்கி உயிர் இழந்தார். 6 பயணிகள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியபடி கிடந்தனர். சக பயணிகள் என்ன நடக்கிறது என்பதை சுதாரிப்பதற்குள், இந்த கோர சம்பவம் அரங்கேறியது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, டிரைவர் ரயிலை மேற்கொண்டு இயக்காமல், அங்கேயே நிறுத்தினார். பதறியடித்துக் கொண்டு மற்ற பயணிகள் கீழே இறங்கி பார்த்த போது, தோளில் புத்தகப் பையுடன் இறந்து கிடந்த மாணவர்களை பார்த்து கதறி அழுதனர். உடனடியாக, ரயில்வே போலீசார் விரைந்து வந்து,  பயணிகளை அப்புறப்படுத்தினர்.

நேற்று இரவு, இன்று காலை என 24 மணி நேரத்திற்குள் 7 உயிர்களை காவு வாங்கியுள்ளது பரங்கிமலை ரயில் நிலையம்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: St thomas mount train accident 4 passengers died

Next Story
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com