அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடி குடும்பப்பெயர் குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக, அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதையும் படியுங்கள்: ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை: கும்பகோணத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங். கட்சியினர் ரயில் மறியல்
இந்தநிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் ராகுல் காந்திக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”குற்றம் சாட்டப்படும் மனதுடன் கருத்துக்கள் கூறப்படவில்லை என்று அவரே கூறிய பின்னரும் ராகுல் காந்தி போன்ற தலைவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, மிகவும் வருந்தத்தக்கது மற்றும் முன்னோடியில்லாதது.
எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பா.ஜ.க இப்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது, இதுபோன்ற அட்டூழியங்கள் விரைவில் முடிவுக்கு வரும். சகோதரர் ராகுல்காந்தியுடன் பேசி எனது ஒற்றுமையை தெரிவித்தேன். இறுதியில் நீதி வெல்லும் என்று நான் நம்புகிறேன்!” என்று பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசன் வெளியிட்டுள்ளப் பதிவில், ”ராகுல்ஜி, இந்த நேரத்தில் நான் உங்களுடன் நிற்கிறேன்! நீங்கள் அதிக சோதனை நேரங்களையும் நியாயமற்ற தருணங்களையும் பார்த்திருக்கிறீர்கள். நமது நீதித்துறை அமைப்பு நீதி வழங்குவதில் உள்ள விதிமீறல்களை சரிசெய்யும் அளவுக்கு வலுவானது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான உங்கள் மேல்முறையீட்டில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்! சத்யமேவ ஜெயதே!!” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil