தி.மு.க.,வை வாழ வைத்துக் கொண்டு இருப்பது தொண்டர்கள்தான் என்று தி.மு.க முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், அதே விழாவில் தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் தொடக்கூட முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா வேலூரில் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டார்.
இந்த விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், வேலூருக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்தவர் கருணாநிதி. நானும், துரைமுருகனும் கருணாநிதியால் வளர்த்து எடுக்கப்பட்டவர்கள். வேலூரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஒக்கேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தவர் கருணாநிதி.
சிப்பாய் கலகத்தின் நினைவு தூணை வேலூரில் நிறுவியர் கருணாநிதி. தோன்றிய காலம் முதல் அதே இளைய உணர்வோடு இருப்பது தி.மு.க. கொட்டும் மழையில் பிறந்ததால்தான் தி.மு.க வேகமாக வளர்ந்து வருகிறது. தி.மு.க.,வை வாழ வைப்பது தொண்டர்கள்தான். தி.மு.க.,வின் வளர்ச்சிக்கு தொண்டர்கள்தான் காரணம். தொண்டர்களால் உருவாக்கப்பட்டவன் நான்.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரம் வரி வருவாய்தான். நிதி ஆதாரங்கள் கிடைக்காமல் தடுக்கவே ஜி.எஸ்.டி கொண்டு வந்தனர். தமிழகத்தின் வளர்ச்சி மற்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தி உள்ளது. புதிய கல்விக்கொள்கை என மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை தடுக்கின்றனர்.
நீட் தேர்வு குறித்து தனியாகச் சொல்லத் தேவையில்லை. அனிதா முதல் ஜெகசீதன் வரை தற்கொலை தொடர்கிறது. கோச்சிங் சென்டர்கள் லாபத்திற்காகவே நீட் தேர்வைக் கொண்டு வந்துள்ளனர். வட மாநிலங்களிலும் நீட் தேர்வால் மரணங்கள் நடக்கிறது. அது குறித்து ஆராய்ந்துள்ளனரா?
2015இல் மதுரையில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என்றார்கள். இதுவரை எங்கே வந்தது அந்த எய்ம்ஸ். மத்தியில் இந்தியா கூட்டணி வென்றால் 15 மாதங்களில் எய்ம்ஸ் அமைக்க முடியாதா? முதல்வர் சொன்ன ரூ.1000 வந்தாச்சு. பிரதமர் சொன்ன 15 லட்சம் எங்கே என கேட்கிறார்கள் பொதுமக்கள். வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போவதால் இப்போது மற்ற விஷயங்கள் குறித்து பேசுகிறார்கள்.
தேர்தல் வரும் நேரத்தில் கண்துடைப்பிற்காக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் சுமை அதிகரித்துள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சி.பி.ஐ அதிகாரிகள் மீது தான் ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகம் உள்ளது என சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் நிச்சயம் இந்தியா கூட்டணி வெல்லும்" இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.
இந்த விழாவில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்பார் கருணாநிதி. இயக்கத்தை மட்டுமின்றி இங்குள்ள எந்தவொரு கிளை செயலாளரையும் கூட தொட்டுக் கூட பார்க்க முடியாது. இப்போது தி.மு.க.,வில் பல்வேறு அணிகளுக்கும் ஒவ்வொரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இளைஞரணி சார்பில் நூலகம், பேச்சுப் போட்டி, மாரத்தான் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக மக்கள் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். நான் இப்போது வேலூர் வந்தபோதும், என்னைச் சூழ்ந்து கொண்டு இந்தத் திட்டத்திற்கு நன்றி தெரிவித்தார்கள். இந்தியாவிலேயே மிகப் பெரிய திட்டமாக இது இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய மாநாடாக இளைஞரணி மாநாடு இருக்கும்.
நாம் கடந்த 2021இல் நடந்த சட்டசபையில் அடிமைகளை விரட்டி அடித்தோம். அதேபோல அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிப்போம்" இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“