சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை எனும் தொழிலாளர் சட்டமசோதா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த சட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒரு சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் என்றால், அதனை உடனடியாக திரும்பப் பெறுவதும் துணிச்சல் தான் என்றும் அவர் கூறினார்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று (மே 1) சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மே தினப் பூங்காவில் உள்ள மே நினைவு சின்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
உழைப்பாளர் தின நிகழ்ச்சியில் அனைத்து தொமுச பேரவை இணைப்பு சங்க நிர்வாகிகள், தொழிற்சங்க உறுப்பினர்களும் கருப்பு சிவப்பு உடை அணிந்து வர வேண்டும் என்று தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்து இருந்தார். அதன்படி ஆண்கள் சிவப்பு சட்டை அணிந்தும், பெண்கள் சிவப்பு நிற புடவை அணிந்தும் வருகை தந்திருந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சிவப்பு நிற சட்டை அணிந்து வந்திருந்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின் 12 மணி நேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், "பெருமுதலீடுகளை ஈர்க்க, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவே அந்த சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டது. அனைத்து தொழிற்சாலைகளுக்குமான சட்டமுன்வடிவு அல்ல. தொழிலாளர்களை பாதுகாக்கும் அம்சங்கள் பல இருந்தன.
ஆனால் சில சந்தேகங்கள் தொழிற்சங்கங்களுக்கு இருந்தன. திமுக தொழிற்சங்கமும் எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு பாராட்டுகிறேன். உடனடியாக அனைத்து தொழிற்சங்க தோழர்களை கோட்டைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அதனை திரும்பப் பெற்றுள்ளது தான் திமுக அரசு. இதனை அவமானமாகக் கருதவில்லை. பெருமைப்படுகிறேன். திரும்ப பெறப்பட்டுள்ள செய்தி விரைவில் தெரிவிக்கப்படும். ஒரு சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் என்றால், அதனை உடனடியாக திரும்பப் பெறுவதும் துணிச்சல் தான்" என்று கூறினார்.
முன்னதாக 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு தி.மு.க கூட்டணி கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.