விண்வெளி துறையில் சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் விண்வெளித் துறையில் சாதனைப் படைத்த தமிழக விஞ்ஞானிகளுக்கு அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன், சந்திரயான் 1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ திரவ உந்துவிசை மைய இயக்குனர் முனைவர் வி.நாராயணன், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் ஏ.இராஜராஜன், யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மைய இயக்குனர் எம்.சங்கரன், மகேந்திரகிரி இஸ்ரோ உந்துவிசை மைய இயக்குனர் ஜெ.ஆசிர் பாக்கியராஜ், சந்திரயான் 2 திட்ட இயக்குனர் மு.வனிதா, ஆதித்யா எல்1 திட்ட இயக்குனர் நிகார் ஷாஜி, சந்திரயான் 3 திட்ட இயக்குனர் முனைவர் ப.வீரமுத்துவேல் ஆகிய 9 விண்வெளி விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், விஞ்ஞானிகள் 9 பேருக்கும் தலா 25 லட்ச ரூபாய் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் பொறியியல் படிக்கும் 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானி என்ற பெயரில் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“