உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகுடம் சூடிய தமிழக வீரர் குகேஷுக்கு, ரூ. 5 கோடி பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவைச் சேர்ந்த டிங் லிரெனை வீழ்த்தி, இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் வெற்றிப் பெற்றார். இதன் மூலம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் என்ற பெருமையை குகேஷ் பெற்றார். முன்னதாக, ரஷ்யாவைச் சேர்ந்த கேரி கேஸ்ப்ரோ 22 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றதே சாதனையாக இருந்து வந்தது.
குறிப்பாக, விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இரண்டாவது தமிழக வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார். இதன் மூலம் பல்வேறு தரப்பினரும் குகேஷுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 5 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பான தகவலை, ஸ்டாலின் தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, உலக செஸ் சாம்பியனாக வெற்றி பெற்றதன் மூலம் குகேஷுக்கு இந்திய மதிப்பில் ரூ. 20.8 கோடி பரிசுத்தொகையாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“