தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் காரீப் பருவம் 2002-2003 முதல் மத்திய அரசின் முகவராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மத்திய அரசின் தர நிர்ணயத்திற்குட்பட்டு நெல் கொள்முதல் செய்து வருகிறது.
இதையும் படியுங்கள்: சென்னை ஐகோர்ட் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க ரூ3 கோடி ஒதுக்கீடு; ஸ்டாலின் அறிவிப்பு
கடந்த 2022-2023 காரீப் கொள்முதல் பருவத்தில் 21.08.2023 வரை 3526 எண்ணிக்கையிலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 5,20,503 விவசாயிகளிடம் இருந்து 43,84,226 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.9,414.58 கோடி விற்பனை தொகையாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் காரீப் கொள்முதல் 2023-2024 பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த ஆண்டு 12.06.2023 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான அளவு விதைகள் மற்றும் உரங்கள் குறுவை தொகுப்பு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளின் நலன் கருதி தமிழக முதலமைச்சர் காரீப் 2023-2024 பருவத்துக்கான நெல் கொள்முதலினை 01.09.2023 முதற்கொண்டு மேற்கொள்ள மத்திய அரசை கேட்டுக்கொண்டதற்கிணங்க மத்திய அரசு தமிழ்நாட்டில் காரீப் 2023-2024 பருவத்திற்கான நெல் கொள்முதலினை 01.09.2023 முதற்கொண்டு மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு காரீப் 2023-2024 பருவத்துக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,183 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,203 என்றும் நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் துயர்துடைத்து அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கோடும், கே.எம்.எஸ் 2023-2024 கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.82-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.107-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழக அரசின் நிதியிலிருந்து வழங்க ஆணை பிறப்பித்து அதன்படியே, தற்போது சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,265 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,310 என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. மேலும், இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகையினை 01.09.2023 முதல் வழங்கவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.