காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளும் ஆக்கபூர்வமான திட்டங்களுடன் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவோம் என சுனாமி நினைவு தின நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி எனும் ஆழிப்பேரலை தமிழக கடற்கரையை சீர்குலைத்தது. 19 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் (டிசம்பர் 26) அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி அலைகள் 30 மீட்டர் உயரத்துக்கு கடலில் எழுந்து 14 நாடுகளில் கடலோரப் பகுதிகளை தாக்கியது. இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளில் கரையோரம் இருந்த 2,29,866 பேர் உயிரிழந்தனர். 43,786 பேரை காணவில்லை.
தமிழகத்தில் சுனாமி தாக்குதலில் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் அதிக அளவில் பொருட்சேதமும் ஏற்பட்டது. இந்த சோக நிகழ்வின் நினைவு தினம் இன்றைய தேதியில் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்வின் நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ”பல்லாயிரம் பேரின் வாழ்வைப் புரட்டிப் போட்டு, தமிழ்நாட்டை மீளாத்துயரில் ஆழ்த்திய ஆழிப்பேரலையின் 19-ஆம் ஆண்டு! சுனாமியால் உயிரிழந்தோரை நினைவில் ஏந்தி, காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளும் ஆக்கபூர்வமான திட்டங்களுடன் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவோம்! அதன் முதல்படியாக இயற்கையைக் காக்க உறுதியேற்போம்!,” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“