காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயல்படாத மத்திய அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடத்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முடிவெடுக்கப்பட்டது. ஏப் 1ம் தேதி நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்பட்டது. மேலும் ஏப் 7ம் தேதி “காவிரி உரிமை மீட்பு பயணம்” திருச்சி துவங்கி 7 நாள் பயணமாக சென்னை வரை நடைபெறும் என்று முழிவெடுக்கப்பட்டது.
மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று திருச்சி முக்கொம்பு பகுதியில் துவங்கிய மீட்பு பயணம் கல்லணையில் நிறைவடைந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று 2 வது நாள் நடைப்பயணத்தைத் துவங்கியுள்ளார்.
2வது நாளாக நடைபெறும் இந்த உரிமை மீட்பு பயணம், தஞ்சையின் சூரக்கோட்டை பகுதியில் துவங்கி வாண்டையார் இருப்பு பகுதியில் நிறைவடையும். ஈச்சங்கோட்டை வழியாக இன்றைய நடைப்பயணம் இயங்கும். மேலும் சில்லத்தூர் பகுதி மக்களையும் விவசாயிகளையும் சந்தித்து ஸ்டாலின் பேசுகிறார். இந்தப் போராட்டத்திற்கு திருமாவளவன், திருநாவுக்கரசர், முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
காவிரியில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை மீட்டெடுக்கும் நோக்கில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. மேலும் காவிரி உரிமை மீட்பு பயணத்தின் போராட்ட குழுக்கள் இரண்டாகப் பிரிந்து செயல்படும். வருகிற 9ம் தேதி (நாளை) அரியலூரில் மீட்பு பயணத்தை இரண்டாவது குழு நடத்தும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழு நாட்கள் நடைப்பயணமாகத் துவங்கியுள்ள இந்தப் போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும் ஏப் 11ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.