தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70 ஆவது பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்காக அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் சென்னை நந்தனத்தில் தி.மு.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்றனர்.
இதையும் படியுங்கள்: தி.மு.க கூட்டணியை நாடும் பா.ம.க; விமர்சனங்களை முன்வைக்கும் திருமாவளவன், வேல்முருகன்
நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ”என்னை ஒப்பிடுகையில் நீங்கள் இளமையானவர், நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் நலத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். தமிழ்நாடு எப்போதும் முன்னோடியான மாநிலம், சிறந்த தலைவர்கள், அதிகாரிகள், எழுத்தாளர்களை உருவாக்கிய மாநிலம். தமிழ்நாடு தான் கட்டாய கல்வியை முதலில் கொண்டு வந்தது. சமூக நீதியை காப்பதில் காங்கிரஸூம் தி.மு.க.,வும் இணைந்து செயல்படும். தமிழ்நாடு மதிய உணவுத்திட்டம், அனைவருக்கும் கல்வி, தொழில்துறை வளர்ச்சி என அனைத்து திட்டங்களையும் அறிமுகப்படுத்தியதில் முன்னணியில் உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமரான நேரு நாட்டில் அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்த விரும்பியதை ஸ்டாலின் பின்பற்றுகிறார். அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பு சட்டம் விழுமியங்கள் தி.மு.க.,வின் அடிப்படையாக உள்ளன.
2024 நாடாளுமன்ற தேர்தலிலும் எங்களது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தொடரும். இக்கட்டான நிலையில் நாடு தற்போது உள்ளது இந்த சூழலில் எங்களது கூட்டணி தொடரும். தமிழ்நாடு பா.ஜ.க.,விற்கு ஒரு இடத்தைக் கூட கொடுக்கவில்லை. தமிழ்நாடு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் மூலம் பா.ஜ.க அரசியல் செய்கிறது. நீதித்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்திலும் பா.ஜ.க தலையீடு செய்து வருகிறது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும். மக்களை வேற்றுமைப்படுத்துபவர்களுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். யார் தலைமை தாங்குவது என்பது முக்கியமில்லை, ஒன்றிணைந்து அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டும். யார் நாட்டை வழிநடத்தப் போகிறார்கள் என நான் தெரிவிக்கவில்லை. அது முக்கியமல்ல. நாம் இணைந்து செயல்பட வேண்டும். பா.ஜ.க.விற்கு எதிரான இந்த போராட்டம் முக்கியமானது. நாம் இதில் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன்,” என்று கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய அகிலேஷ் யாதவ், ”தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர், மக்களைத்தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் தமிழகத்தின் சிறப்பான திட்டங்கள்” என கூறினார்.
“வட இந்தியாவில் இருக்கும் கட்சிகள் உங்களிடம் சமூகநீதியைக் கற்றுக்கொள்ள வேண்டும். வேலையின்மை, பணமதிப்பு வீழ்ச்சி, என நம் நாடு பல பிரச்னைகளில் உள்ளது. நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவி வருகிறது” என பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறினார்.
”நீங்கள் தமிழகத்திற்கு மட்டும் சேவை செய்யாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சேவை செய்வதற்காக நீண்ட காலம் வாழ்வீர்கள். நீங்கள் தேசிய அரசியலுக்கு வரவேண்டும். இந்தியா இப்போது இக்கட்டான சூழலில் உள்ளது. ஜனநாயகமும் அரசியலமைப்பும் அச்சுறுத்தப்படுகிறது. விழித்துக்கொள்வோம்.” என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறினார்.
இறுதியாக உரையாற்றிய ஸ்டாலின், ” ஸ்டாலின் என்ற பெயருக்குள் கோடிக்கணக்கான உயிர்கள், உடன்பிறப்புகள் அடங்கி இருக்கிறது. பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் வந்தவன் நான். இது எனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட மேடை அல்ல. இந்திய அரசியலுக்கான புதிய தொடக்க விழா. மு.க.ஸ்டாலின் எனும் நான் வீட்டிற்கு விளக்காக இருப்பேன், நாட்டுக்கு தொண்டனாக இருப்பேன், மக்களுக்காக கவலைப்படக்கூடிய தலைவனாக இருப்பேன். அண்ணா போல பேச தெரியாது. கலைஞர் போல பேச தெரியாது. ஆனால் அவர்களை போல உழைக்க தெரியும். பொது வாழ்க்கை இப்படித்தான் இருக்குமென, வசந்த மாளிகைக்கு அனுப்பி வைப்பது போல சிறைக்கு அனுப்பி வைத்தார் கலைஞர். 70 வயது ஆகிவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை; மக்களுக்காக போராடும் நமக்கு கால நேரம் கிடையாது. 16 வயதில் மக்கள் பணியாற்றத் தொடங்கினேன். எனது பயணம் நீண்ட நெடிய பயணம். 2024 தேர்தலில் பாஜகவை ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும். 2024 தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட, யார் ஆட்சி அமைக்க கூடாது என்பதே முக்கியம்” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.