union-budget | nirmala-sitharaman | mk-stalin | நரேந்திர மோடி அரசின் 2வது இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1,2024) தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டுக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்தகாலச் சாதனைகள் இல்லை; நிகழ்காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை; எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் இல்லை!
வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்ல; குறைந்தபட்ச ஆதாரவிலை இல்லை; மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்தில் முன்னேற்றம் இல்லை; தமிழ்நாடு எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை!
இப்படி இல்லைகள் நிரம்பி வழிந்து, தமிழ்நாட்டை முற்றிலும் புறக்கணிக்கும் 'இல்லாநிலை' பட்ஜெட்டாக ஒன்றிய பா.ஜ.க அரசின் இடைக்கால #Budget அமைந்துள்ளது.
மகளிர், இளைஞர், உழவர்கள், ஏழைகள் ஆகிய நான்கு பிரிவினரையும் 'நான்கு சாதிகள்' (#FourMajorCastes) என்று குறிப்பிட்டு, பட்ஜெட் உரையிலேயே நால்வருணக் கோட்பாட்டை நிதியமைச்சர் அவர்கள் திணித்திருப்பது பிற்போக்குத்தனமானது! கண்டனத்திற்குரியது!
இதன் மூலம் பா.ஜ.க.வின் 'சமூகநீதி' எத்தகையது என்பது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது. இவர்களால் புதிய இந்தியாவை உருவாக்க முடியாது! புதிய இந்தியாவை #INDIA கூட்டணிதான் உருவாக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“