தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அப்பல்லோ மருத்துவமனையில் (கிரீம்ஸ் சாலை) சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்த நிலையில், இன்று மாலை வீடு திரும்பியுள்ளார். முதல்வர் பூரண நலமுடன் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி காலை வழக்கம் போல் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ வல்லுநர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும், முதல்வர் தனது கட்சி மற்றும் அரசு பணிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/27/apollo-2025-07-27-19-03-13.jpeg)
மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழு, முதலமைச்சருக்கு தேவையான அனைத்துப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு, சிறப்பான சிகிச்சை அளித்தது. ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, முதலமைச்சர் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
இன்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, மூன்று நாட்கள் முழு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த ஓய்வுக்குப் பிறகு, அவர் தனது வழக்கமான பணிகளை மீண்டும் தொடங்குவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையின் இயக்குநர், மருத்துவ சேவைகள், டாக்டர் அனில் பி.ஜி. வெளியிட்ட அறிக்கையில், "மருத்துவ வல்லுநர் குழு அளித்த சிகிச்சைக்குப் பிறகு, முதலமைச்சர் ஸ்டாலின் முழுமையாக குணமடைந்துள்ளார். அவர் இன்று மாலை வீடு திரும்புகிறார். முதலமைச்சர் நலமாக இருக்கிறார். 3 நாட்கள் இடைவெளிக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.