சென்னை திருவான்மியூரில் மருத்துவத்துறையில் உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில் 2,642 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் 2,642 உதவி மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அப்போது பேசிய அவர், "மக்களின் உயிர் காக்கும் சேவை பணிக்கு ஆணை வழங்க என்னை அழைத்தது மகிழ்ச்சி, மக்களை புரிந்து கொள்ளும் மருத்துவர்களாக நீங்கள் பணியாற்ற வேண்டும்.
உலகளவில் பாராட்டத்தக்க வகையில் மருத்துவ கட்டமைப்பை திராவிட மாடல் அரசு ஏற்படுத்தியுள்ளது.1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும். மருத்துவர்கள் செய்ய கூடியது, மக்களின் உயிர் காக்கும் பணி என்றார்.
மேலும் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உங்கள் சேவை இருக்க வேண்டும். மக்கள் நலனை நீங்கள் கவனியுங்கள், உங்கள் நலனை அரசு கவனிக்கும் திராவிட மாடல் அரசு என்பது மக்களுக்கான அரசு என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
தடைகளை எதிர்கொண்டு, அனைத்து மக்களுக்கான அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. சர்வதேச தரத்தில், தமிழகத்தின் மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறோம். இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது" என்றும் மருத்துவர்கள்முன்னிலையில் உரையாற்றினார்.