சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். பா.ம.க.,வின் கோரிக்கைகளுக்கு சாதகமாகத்தான் நாங்களும் குரல் கொடுத்து வருகிறோம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பா.ம.க குரல் கொடுத்து வருகிறது. மேலும், இதற்காக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்று விவாதத்தின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, மத்திய அரசு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும். அதை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக குறிப்பிட்டார். அதனை ஏற்க மறுத்து பா.ம.க எம்.எல்.ஏ.,க்கள் இருக்கையை விட்டு எழுந்தனர்.
இதனையடுத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். முதல்வர் ஸ்டாலின் தனது பதிலில், ”சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து இந்த அவையில் ஏற்கனவே பேசப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டசபையில் பல நேரங்களில் பதில் சொல்லப்பட்டுள்ளது. இதை எல்லாம் தாண்டி பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத்தலைவர் ஜி.கே. மணி. பா.ம.க எம்.எல்.ஏ.,க்கள், தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நேரடியாக சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
அப்போதில் இருந்தே நாங்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் சொல்கிற கொள்கைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். உங்களின் கோரிக்கைகளுக்கு சாதகமாகத்தான் நாங்களும் குரல் கொடுத்து வருகிறோம். இந்த விளக்கத்திற்குப் பிறகு நீங்கள் என்ன செய்தாலும் அதற்கு நான் தடை சொல்ல விரும்பவில்லை,” என்று தெரிவித்தார்.
இருப்பினும், முதல்வர் விளக்கத்தை ஏற்காத பா.ம.க உறுப்பினர்கள் சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“