Stalin function questionable due to heavy rain in Pudukkottai: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக நாளை புதுக்கோட்டைக்கு வருகின்றார். அங்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று சுமார் ரூ.614 கோடியில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியும் சிறப்புரையாற்றவிருக்கின்றார்.
இந்தநிலையில் புதுக்கோட்டையில் இன்று அதிகாலை பெய்த தொடர் மழையின் காரணமாக நாளை காட்டுபுதுக்குளம் பகுதியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ள தமிழக முதல்வரின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரங்கம் சேறும், சகதியுமாக மாறியது. இன்று மாலையும் மழை பெய்யுமானால் அந்த இடம் குளமாகவே மாறிவிட வாய்ப்பிருக்கின்றது. இந்த சூழலில் இன்று காலை முதல் சேறுகளை வழித்து அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு புதுக்கோட்டைக்கு முதன்முறையாக அரசு விழாவில் கலந்துகொள்வதற்கு தமிழக முதல்வர் வரவுள்ளதால் விழாவுக்கான முன்னேற்பாட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. குறிப்பாக புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் 6 மில்லி மீட்டரும், நேற்று நள்ளிரவு 39 மில்லி மீட்டரும் மழை அளவு பதிவானது.
அடுத்தடுத்து தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், நகரின் பிற பகுதிகளை விட விழா நடைபெற உள்ள இடமானது தாழ்வாக இருப்பதாலும், பிற பகுதிகளிலிருந்தும் மழைநீர் பெருக்கெடுத்து இப்பகுதியை நோக்கி வந்து தேங்கியுள்ளது. மேலும், சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால், முன்னேற்பாட்டு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதோடு, சேறும் சகதியையும் பணியாளர்களைக் கொண்டு வழித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், எம்எல்ஏ வை.முத்துராஜா, ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதையும் படியுங்கள்: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கருமுட்டை விற்பனை; தமிழக அரசு தீவிர விசாரணை
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. பொதுவாக மழை காலங்களில் பெருமளவு தண்ணீர் தேங்கி வாரக்கணக்கில் குளம் போல் காட்சி அளிக்கக்கூடிய பகுதியாகவே மாவட்ட விளையாட்டு மைதானம் ஏற்கனவே இருந்து வந்துள்ளது. இதனால், தொடர்ந்து மழை பெய்தால் விழா நடத்துவதற்கு மிகவும் இடையூறாக இருக்கும். ஆகையால், மழை தொடர்ந்தால் நிகழ்ச்சி ரத்தாகும் சூழலும் ஏற்படலாம் என அதிகாரிகள் தரப்பில் அச்சமடைந்திருக்கின்றனர்.
விழா நடைபெறும் இடத்தை இதுபோன்ற தாழ்வான பகுதியை தேர்வு செய்வதைவிட, மன்னர் அரசு கல்லூரி மைதானம் போன்ற மேடான பகுதியை தேர்வு செய்திருக்கலாம் என்பது அப்பகுதி பொதுமக்களின் கருத்தாகவும் உள்ளது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil