முன்னாள் முதலமைச்சரும் மறைந்த தி.மு.க தலைவருமான மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அக்கட்சி தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “பாரதிய ஜனதா கட்சியைப் பார்த்து பயப்பட மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “திமுக பெயரைக் கேட்டால் அரசியல் எதிரிகள் அலறுகிறார்கள். நாட்டின் பிரதமர் தான் கலந்துகொண்ட மத்திய பிரதேச மற்றும் அந்தமான் நிகோபர் நிகழ்ச்சிகளில் தி.மு.க. மீது தேவையின்றி விமர்சனம் வைக்கின்றார்.
நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசு மீது ‘இந்தியா’ கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ஆணித்தரமான வாதங்களை அடுக்கிப் பேசினார் காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் அன்புச் சகோதரர் ராகுல்காந்தி அவர்கள்.
மணிப்பூரைப் பற்றி, அங்கு நடக்கும் கலவரம் பற்றி அங்கே பற்றி எரியும் வன்முறைத் தீ பற்றிப் பேசினார். ‘பாரத் மாதா கீ ஜே’ என்று கோஷம் போடும் பா.ஜ.க.வின் ஆட்சியில் மணிப்பூரில் பாரத மாதா என்ன நிலையில் இருக்கிறார் என்பதைக் கேள்வியாக முன்வைத்தார் ராகுல் காந்தி.
இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்பார் என்பதால்தான் அவரது எம்.பி. பதவியைப் பறிப்பதில் பா.ஜ.க. படுவேகம் காட்டியது.
ஆனால், உச்சநீதிமன்றம் சென்று நீதியை நிலைநாட்டி, நாடாளுமன்றத்தில் இளஞ்சிங்கமாக நுழைந்து கர்ஜித்திருக்கிறார் ராகுல்.
அவருடைய வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமைச்சர் மதிப்பிற்குரிய ஸ்மிருதி இரானி அவர்கள், தன் பேச்சில் தி.மு.க. மீது அவதூறு சுமத்தி, திசை திருப்பும் வேலையைச் செய்ய நினைத்தார்.
நமது கழகத்தின் மக்களவை உறுப்பினர் - துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று, ஒன்றிய அமைச்சரவையில் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் பொறுப்பில்லாத்தனமாகப் பேசிய நிலையில் அதற்கு ஆ.இராசா அவர்கள் உடனடியாக பதிலடி கொடுத்ததை உடன்பிறப்புகளான உங்களில் பலர் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.
நான் கைது செய்யப்படப் போவதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி மிரட்டுகிறார். இதன் மூலமாக நீதித்துறையை பா.ஜ.க. அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்று கூற வருகிறாரா? நாடாளுமன்றத்தில் உரத்த குரலில் கேட்டதற்கு, ஆளுந்தரப்பில் உரிய பதில் தரப்படவில்லை.
பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள், பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு அடிபணியாத கட்சிகள் இவற்றைக் குறி வைப்பதற்காகத்தானே அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்டவற்றை பா.ஜ.க. அரசு தன் கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினரைப் பார்த்து, “எங்களை எதிர்த்தால் உங்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்” என்ற வகையில் பேசிய அமைச்சரை ஒரு சில நாட்களுக்கு முன் நாடு பார்த்தது.
தி.மு.க இத்தகைய மிரட்டல்களுக்கும் பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க.வினரின் குரலைக் கேட்டால், பா.ஜ.க அரசு நடுங்குகிறது.
கருணாநிதியின் போராட்ட வாழ்க்கை வரலாறு, கழக ஆட்சியின் சாதனைகள், திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சுவடுகள் இவற்றை உள்ளடக்கிய புகைப்படக் கண்காட்சியை மாவட்டத் தலைநகரங்களில் நடத்தும் பொறுப்பினை மாவட்டப் பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோரிடம் தலைமைக் கழகம் வழங்கியுள்ளது.
கலைஞர் என்பது வெறும் பெயர்ச் சொல் அல்ல! தமிழ் இனம் – மொழி - நிலம் காத்து நிற்கும் வினைச்சொல். நமக்கு உரிமையுள்ள உரிச்சொல். அரசியல் எதிரிகளை அடையாளம் காட்டி ‘உரி’க்கின்ற சொல்.
எந்நாளும் நமக்கு ஊக்கத்தையும், இன எதிரிகளுக்கு அச்சத்தையும் தருகின்ற சொல். இந்தியா முழுமையும் உள்ள ஜனநாயக இயக்கங்களுக்கு உறுதுணையாக நிற்கும் சொல். இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் சிதைக்க நினைக்கின்ற மதவாத சக்திகளை நடுங்க வைக்கும் சொல். குமரி முதல் இமயம் வரை கலைஞர் என்ற பெயரைச் சொல்லுவோம்! இந்தியா முழுவதும் கலைஞரின் கொள்கைகளை எடுத்துரைத்து வெல்லுவோம் ” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.