வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வட மாநில பாஜக தலைவர்கள்தான் தவறான செய்திகளை பரப்பியதாக கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றுகூட வேண்டும் என்று தான் பேசியதைத்தொடர்ந்து இந்த போலிச் செய்திகள் பரப்பப்படுவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
வட மாநில தொழிலாளர்கள் குறிப்பாக பீகார், ஹரியான போன்ற இடங்களிலிருந்து வருபவர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக போலிச் செய்திகள் வெளியானது. பீகார் முதல்வர் அமைத்த குழு சென்ற வாரம் தமிழகம் வந்து, புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை பற்றி தெரிந்துகொண்டு, விளக்கம் அளித்தது.
இந்நிலையில் ‘உங்களில் ஒருவன் நிகழ்வில்’, கேள்வி- பதில் நடைபெறும் போது முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார் . வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வெளியான போலிச் செய்தி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஸ்டாலின் “வட மாநிலத்தின் பாஜக தலைவர்கள் இதை உள்நோக்கத்தோடு செய்திருக்கிறார்கள். பாஜகவிற்கு எதிராக அனைத்து கட்சிகள் இணைய வேண்டும் என்று நான் பேசியதை தொடர்ந்து இந்த போலிச் செய்தி பரப்பப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
பட்னாவில், ஜெ.டி.யு கட்சி,’ இரு மாநிலங்களுக்கு இடையே பகையை உருவாக்க பாஜக நினைக்கிறது. அதனால்தான் இது போன்ற போலிச் செய்திகள் வெளிவருகிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக ஜெ.டி.யு-வின் தேசிய தலைவர் ராஜிவ் ராஜன் சிங் கூறுகையில், “ பீகார் மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே ஒரு மோதலை ஏற்படுத்த பாஜக நினைத்தது. ஆனால் என்ன நடதிருக்கிறது என்று பாருங்கள், இதுபோல ஒரு சம்பவம் கூட தமிழகத்தில் நடைபெறவில்லை. பீகாரில் இருந்து சென்ற குழு நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது. தமிழக அரசும் இதை தெளிவுபடுத்தி உள்ளது” என்று அவர் கூறினார்.
’இந்த போலி செய்தியை பார்த்த பிறகு, பீகார் முதல்வர் நித்திஷ் குமாரை அழைத்து இது போன்ற எந்த வன்முறையும் நடக்கவில்லை. தமிழக டிஜிபி இது தொடர்பாக விரிவான விளக்க அறிக்கையை வெளியிட்டார். தமிழகம் எப்போதும் வெளியிலிருந்து வரும் மக்களை வரவேற்கும். மேலும் அவர்கள் நல்ல முறையில் வாழ உதவி செய்யும்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மேலும் பேசிய ஸ்டாலின் “ தமிழர்கள் எப்போதும் சகோதரத்துவத்திற்கு முக்கியத்துவம் வழங்குவோம். ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள் என்பதை வட மாநில தொழிலாளர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள்” என்று அவர் கூறினார். மார்ச் 1ம் தேதி திமுக ஏற்பாடு செய்திருந்த பேரணியில், 2024 தேர்தலில் பாஜக-வை தோற்கடிக்க எதிர்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார் என்பது குறிப்பிடதக்கது.