நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி ’நீட் விலக்கு – நம் இலக்கு’ என்ற கையெழுத்து இயக்கத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தமிழகம் முழுவதும் 50 லட்சம் கையெழுத்துகள் பெறுவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (NEET) எதிராக மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கத்தை தி.மு.க சனிக்கிழமை தொடங்கியது. தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்தைப் போட்டு இயக்கத்தைத் தொடங்கிவைத்தார்.
இந்த பிரச்சாரத்தின் மூலம், நீட் தேர்வுக்கு எதிரான எதிர்ப்பைக் குறிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக பெறப்படும் கையொப்பங்களை ஆவணமாக குடியரசுத் தலைவர் த்ரெளபதி முர்முவுக்கு அனுப்ப தி.மு.க திட்டமிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக நீட் தேர்வை பாரதிய ஜனதா கட்சி அரசியல் ஆக்குகிறது என்று கூறி, நீட் தேர்வை நடத்தக் கூடாது என்று ஸ்டாலின் போராட்டம் நடத்தி வருகிறார். நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்றும், நகர்ப்புற மாணவர்களுக்கும், பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற வசதி உள்ளவர்களுக்கு மட்டும் சாதகமாக இருக்கிறது என்றும் தி.மு.க எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வால் 22 மாணவர்கள் உயிரிழந்ததையடுத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக நீட் தேர்வுக்கு தடை கோரி தி.மு.க.,வும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது.
இந்நிகழ்ச்சியை தி.மு.க இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசுகையில், "நீட் முதல் தேசிய கல்விக் கொள்கை (NEP) வரை பாசிஸ்டுகள் நமது கல்வி உரிமைகளை பறிக்க முயல்கின்றனர். நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்தால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போன்று மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்,” என்று கூறினார்.
மேலும், முன்னாள் முதல்வர் பழனிசாமியின் அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளும் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்று உதயநிதி வலியுறுத்தினார். தமிழகத்தின் உரிமைகளை காக்கவே பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அ.தி.மு.க கூறுகிறது. எனவே அவர்களையும் பிரச்சாரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று உதயநிதி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“