ஃபீஞ்சல் புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் நிச்சயம் மீண்டு வருவோம். புயல் பாதிப்பை வைத்து சிலர் மலிவான அரசியலில் ஈடுபடுகின்றனர் என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை வால்டாக்ஸ் சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1,383 கோடியில் 79 புதிய திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மேலும் 29 முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.6309 கோடி மதிப்பீட்டில் 252 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. முதல்கட்டமாக ரூ.2097 கோடி மதிப்பீட்டில் 87 திட்டங்கள் மார்ச் 14-ல் துவக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின் தெரிவித்ததாவது; ”கடந்த வாரம் நடைபெற வேண்டிய நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சி. ஆனால், என்ன காரணத்திற்காக ஒத்திவைக்கப்பட்டது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் ஃபீஞ்சல் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, இன்றைக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட விளைவுகளை நாம் பார்க்கத் தொடங்கி இருக்கிறோம். வானிலை கணிப்புகளைவிட அதிகமான மழை கொட்டி தீர்க்கும் இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களிலும், உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் இந்த மாற்றத்தையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். எல்லா நாட்டிலும் நடப்பதுதான் அப்படி என்ற காரணத்தினால், நம்முடைய தமிழ்நாடு அரசு அலட்சியமாக இருந்ததில்லை.
தமிழ்நாடு அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஆனால், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் அதிகமான அளவிற்கு மழை பெய்து, பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை, நிவாரணத்தை மழை தொடங்கியதிலிருந்து இப்போது வரைக்கும் தமிழ்நாடு அரசு செய்துகொண்டுதான் இருக்கிறது. புயல் பாதிப்பில் இருந்து நிச்சயம் மீண்டு வருவோம். கடந்த கால மழையின்போது சென்னையை மீட்டெடுத்தது போல் ஒட்டுமொத்த தமிழ்நாடும் மீண்டு வரும்.
அல்லல்படும் மக்களின் வேதனையில் அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாமா என்று சிலர் மலிவான அரசியலில் ஈடுபடுகிறார்கள். அ.தி.மு.க ஆட்சியாளர்களை போல் மக்களை செயற்கை வெள்ளத்தில் தவிக்கவிடவில்லை. பெருமழை பெய்தும் மக்கள் உதவி கேட்டு அல்லல்படும் நிலை இல்லை. அ.தி.மு.க ஆட்சியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோதும் அவர்களை சந்திக்க தலைவர்கள் வரவில்லை. தன்னார்வலர்கள் அளித்த நிவாரணப் பொருட்களிலும் ஸ்டிக்கர் ஒட்டிய காலமும் மலையேறி விட்டது.
தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கையால் மழை நின்ற அடுத்த நாளே நீர் வடிந்துவிட்டது. வெள்ள பாதிப்பை பார்வையிட சென்றபோது வாக்காள பெருமக்களே என்று பேசியவர்கள்தான் அ.தி.மு.க ஆட்சியாளர்கள். விடியலைத் தருவதே உதயசூரியன். விடியலை விடியா ஆட்சி என்று கூறிக் கொண்டே இருப்பார்கள். உதய சூரியனால் கண் கூசுபவர்களுக்கு விடியல் என்றால் என்னவென்றே தெரியாது. தமிழ்நாட்டை இருளில் தள்ளியவர்களுக்கு விடியல் என்றால் என்னவென்றே தெரியாது.
வாக்களிக்கதாவர்களுக்கும் செய்யும் பணியால் தி.மு.க அரசை அனைவரும் பாராட்டுகிறார்கள். தி.மு.க அரசுக்கு கிடைத்த பாராட்டு தான் எதிர்க்கட்சிகளை வயிறு எரியச் செய்துள்ளது. தி.மு.க அரசை பொறுத்தவரை மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். நாம் களத்தில் நிற்பதால் எதிர்க்கட்சியினர் தவித்து நிற்கின்றனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக பதவியேற்றபோது சிங்கார சென்னையாக உருவாக்க முயற்சி எடுத்தேன். சென்னை மேயராக நான் செய்ததைவிட முதலமைச்சராக இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு அதிகமாகி உள்ளது. இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.