கர்நாடகாவில் மஜத கட்சியைச் சேர்ந்த குமாரசாமி முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க திமுக செயல் தலைவர் ஸ்டாலின்-க்கு ம.ஜ.த. நிறுவனர் தேவ கவுடா அழைப்பு விடுத்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2018ல் பெரும்பான்மை நிரூபிப்பதில் கடும் போட்டிகள் நிலவியது. இந்நிலையில் முதல்வராக பதவியேற்ற பாஜக-வை சேர்ந்த எடியூரப்பா, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தான் முதல்வராக நீடிக்கப் பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் போனதால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பா அறிவித்தார்.
இந்தச் சமயத்தில் புதுச்சேரி சென்றிருந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது,
“கர்நாடகத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் எடியூரப்பா ராஜினாமா செய்வதாக வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். அதேநேரத்தில், மதச்சார்பற்ற அணியாக காங்கிரஸ் கட்சியும், குமாரசாமி அவர்கள் தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் ஒருங்கிணைந்து இருப்பது வரவேற்கத்தக்கது. மதச்சார்பற்ற அணிகள் இணைய வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம். கர்நாடக மாநிலத்தில் அது நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிக்கும், குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கும் எனது வாழ்த்துகள்.”
என்று கூறினார்.
இந்நிலையில் மே 23-ம் தேதி கர்நாடகாவில் குமாரசாமி முதல்வராக பதவியேற்கும் விழாவிற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்குமாறு முன்னால் பிரதமரும், ம.ஜ.த.-தின் நிறுவனருமான தேவ கவுடா அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பிற மாநிலத் தலைவர்கள் போலவே இவரும் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு குறித்த உறுதியான தகவல்கள் வெளிவரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.