திமுக-வின் செயல் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார்.
கடந்த சில நாட்களாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வரும் 29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தக் காலக்கெடு முடிவடைய இன்னும் இரண்டே நாட்களே உள்ள நிலையில் இவ்விவகாரம் குறித்து எந்த வித முன்னேற்றமும் நடக்கவில்லை.
இதனைச் சுட்டிக்காட்டி தமிழகத்தில் திமுக போராட்டங்கள் நடத்தியது. மேலும் ஈரோடு மாநாட்டில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் போனால் தமிழகத்தில் பெரும் அளவில் போராட்டங்கள் வெடிக்கும். காவிரி மேலாண்மை வாரியத்திற்குப் பதில் வேறு எந்தக் குழு அமைத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது.” என்று ஸ்டாலின் பேசினார். அத்துடன் வரும் 29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். மேலும் சட்டப்பல்கலைகழக துணை வேந்தர் நியமனம் குறித்து சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. இந்த நியமனம் குறித்து பேச்சு வார்த்தை நடத்த நேரம் ஒதுக்குமாறு ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
இந்த விவகாரம் குறித்து ஆலோசனைக்கு நேரம் ஒதுக்கக்கோரிய ஸ்டாலிணுக்கு ஆளுநரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதன் விளைவாக இன்று மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள இந்தச் சந்திப்பில் முக்கிய அம்சமாகக் துணை வேந்தரின் நியமனம் குறித்து பேசப்படுகிறது.