சென்னையில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் ஐடி ஊழியரை திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடந்த வாரம் (13.2.18) அன்று, சென்னை பெரும்பாக்கம் சாலையில் பணி முடிந்து நள்ளிரவு வீடு திரும்பிய பெண் ஐடி ஊழியரை கொள்ளையர்கள் சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த நகை, மொபைல், இருசக்கர வாகனம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றனர். நடு ரோட்டில் ரத்த வெள்ளத்தில் துடித்த பெண்ணை காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பெண்ணின் சொந்த ஊரான ஆந்திரா மாநிலத்தில் உள்ள அவரின் பெற்றோர்களுக்கும் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்பு, கண் விழித்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தனக்கு நேர்ந்த கொடுமையை அந்த பெண் விவரித்தது, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் கொடுத்த வாக்குமூலத்தின் படி, சென்னை காவல் துறையினர் 3 நபரை கைது செய்தனர்.
இந்நிலையில், நேற்று (19.2.18) இரவு, திமுக செயல்தலைவர் ஸ்டாலின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் ஐடி ஊழியரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது அவருடன் தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன், அவைத்தலைவர் எஸ்.ரவி, மனோநிதி உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது, ''கொள்ளையர்களின் பயங்கர தாக்குதலுக்கு உள்ளாகி, படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐ.டி.பெண் ஊழியர் லாவண்யாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்ப வேண்டும் என்று அவருக்கு ஆறுதல் கூறினேன். உயிருக்கு ஆபத்தான நிலையில் தன்னந்தனியாக கொள்ளையர்களுடன் அவர் தைரியமாக போராடியது என்னை மெய் சிலிர்க்க வைத்தது.மேலும், ஐ.டி. நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையர்களுக்கு விரைவில் உரிய தண்டனை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மருத்துவமனையில் இருக்கும் பெண் ஊழியரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.