மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பது குறித்த அறிவிப்பை எதிர்கட்சிகளான அதிமுக, பாமக, பாஜக ஆகியவை வரவேற்றன.
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நினைவிடம், பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில், காமராஜர் சாலையில் உள்ள அருங்காட்சியக வளாகத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
கருணாநிதியின் நினைவிடம் 2.21 ஏக்கர் நிலப்பரப்பில், மொத்தம் ரூ. 39 கோடி செலவில் கட்டப்படும். இந்த நினைவுச்சின்னம் எதிர்கால தலைமுறையினருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சமூகத்திற்கு அளித்த பங்களிப்புகளை உணர உதவும். கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் கட்டப்பட உள்ளது என்று ஸ்டாலின் கூறினார்.
மேலும் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் நிரந்தர தலைப்புச் செய்தியாக இருந்தவர் கலைஞர். 70 ஆண்டுகளாக பத்திரிக்கையாளராக இருந்தவர். போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் வெற்றி பெற்றவர். தோல்வி அவரை தொட்டதே இல்லை, வெற்றி அவரைக் கைவிட்டதேயில்லை. தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர். கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றவர். இந்திய அரசியலை வழிநடத்திய ஞானி. 80 ஆண்டு கால பொது வாழ்க்கையில் 60 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 13 முறை சட்டபேரவை உறுப்பினராக இருந்த கருணாநிதி, 5 முறை முதல்வராகவும் இருந்துள்ளார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், சென்னை மெட்ரோ திட்டம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரியில் வள்ளுவருக்கு 133 அடியில் சிலை, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், தெற்காசியாவிலே மிகப்பெரிய அண்ணா நூலகம், நுழைவுத் தேர்வு ரத்து, மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச்சீட்டு, உள்ளிட்ட நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பிதான் கருணாநிதி. நாட்டில் கருணாநிதி போல் ஒரு அரசியல் தலைவர் இருந்ததே இல்லை என்று முதல்வர் புகழாரம் சூட்டினார்.
ஸ்டாலின் இந்த ஆண்டு மே 7 அன்று பதவியேற்ற பிறகு 110 விதியின் கீழ் அவர் வெளியிட்ட முதல் அறிவிப்பு இது. ஆகஸ்ட் 7, 2018 அன்று இறந்த கருணாநிதியின் உடல், அவரது அரசியல் வழிகாட்டியும் திமுக நிறுவனர், முன்னாள் முதல்வருமான சி.என்.அண்ணாதுரையின் நினைவிடத்திற்கு அருகில் வைக்கப்பட்டது.
திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ளவர்களைத் தவிர, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான பாமக மற்றும் பிஜேபியும் கருணாநிதி நினைவிடம் குறித்த முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை வரவேற்றனர்.
எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பை வரவேற்று பேசியபோது, கருணாநிதிக்கு நினைவிடம் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வரவேற்கிறேன். அவரை பற்றிய அனைத்து சிறப்பம்சங்களும் நினைவிடத்தில் இடம்பெற வேண்டுமென கோரிக்கை வைக்கிறேன். எனது தந்தை, கலைஞர் கருணாநிதி யின் தீவிர பக்தர் என்றும் அவர் பெட்டியில் எப்போதும் பராசக்தியின் வசன புத்தகம் (கருணாநிதியின் திரைக்கதை) இருக்கும் என்றும் கூறினார்.
மேலும், “இந்த அறிவிப்பை வரவேற்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் .. நாங்கள் முழு மனதுடனும் ஒருமனதாகவும் வரவேற்கிறோம்” என்று பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் கொறடா எஸ்.பி. வேலுமணி முன்னிலையில் கூறினார்.
பாமக தலைவரும், பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜி.கே. மணி இந்த முன்மொழிவை வரவேற்றார், “கலைஞர் வாழ்வை தமிழ், தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வேறுபடுத்த முடியாது.” பல தலைவர்கள் இருந்தபோதிலும், சிலர் மட்டுமே வரலாற்றில் நிலைத்திருப்பார்கள், என்றார்.
இந்த அறிவிப்பை வரவேற்று, பாஜக சட்டப்பேரவைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், நாட்டின் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் கருணாநிதி இருப்பதாக கூறினார்.
சபாநாயகர் அப்பாவு, அவை முன்னவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.செல்வபெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ சிந்தனை செல்வன், சிபிஐயின் டி.ராமச்சந்திரன் மற்றும் சிபிஐ (எம்) வி.பி. நாகை மாலியும் இந்த அறிவிப்பை வரவேற்றனர்.
சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், ஈ.ஆர்.ஈஸ்வரன், சதன் திருமலை குமார், ஜவாஹிருல்லாவும் இந்த அறிவிப்பை வரவேற்று பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil