தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக இன்று காலை டெல்லி சென்றார். அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார்.
பின்னர் கிண்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று, சென்னை - கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை ஜூன் மாதம் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க இருக்கிறார்.
இது குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.28) இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து, சென்னை - கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறந்து வைத்திட அழைப்பு விடுத்தார்.
முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர், “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி அறிவித்தார்.
சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1,000 படுக்கைகளுடன் கூடிய, சுமார் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் ரூ.230 கோடி செலவில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையிலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவினை ஒட்டியும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இந்த விழாக்களில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.
முதல்வரின் அழைப்பினை ஏற்ற குடியரசுத் தலைவர், வரும் ஜூன் மாதம் 5-ம் தேதி சென்னை, கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி தொடர்பான புத்தகங்களை வழங்கியும், திறப்புவிழாவுக்கான அழைப்பிதழை வழங்கியும் தமிழகம் வருகைக்கு உறுதியளித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.