"பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே" - சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்

இந்தியத் திருநாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உகந்த வழிகாட்டிட வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு விழா வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவினை பிரம்மாண்டமாக செய்ய திமுக திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

கருணாநிதியின் உருவச் சிலையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்க உள்ளார். தமிழகத்திற்கு சோனியா வந்து நீண்ட காலமாகிறது. இதனால், கருணாநிதி சிலை திறக்க சோனியா காந்தி வருவது அரசியல் ரீதியாக மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இதற்காக சோனியாவை அழைக்க டெல்லி சென்றிருக்கும் ஸ்டாலின், இன்று காலை அவரது வீட்டில் நேரில் சந்தித்து, சிலை திறப்பு விழா அழைப்பிதழினை அளித்தார். அத்துடன், சோனியா காந்தியின் பிறந்த நாளினை முன்னிட்டு, அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து அளித்து பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டார்.

வாழ்த்துச் செய்தியில், “இன்று 72ஆவது பிறந்தநாள் கொண்டாடும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி அம்மையார் அவர்களை நேரில் சந்தித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.

தலைவர் கலைஞர் அவர்களின் மீது மாறாத பற்றும் பாசமும் கொண்ட அவர், மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைந்தவுடன் தலைவர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று, தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கிடும் வண்ணம், செந்தமிழ் மொழியைச் செம்மொழியே எனப் பிரகடனப்படுத்துவதற்கு மிகவலிமையான அடித்தளம் அமைத்தவர்.

மதச்சார்பின்மைக் கொள்கையில் உறுதியான நம்பிக்கைக் கொண்ட அவர், நாட்டின் பொதுநலன் கருதியும், அனைவருடைய பொதுவான நோக்கங்களுக்கு வடிவமைப்பு கொடுத்திடும் வகையிலும், அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பிற்குத் தூண்டுகோலாகவும் உற்ற பெருந்துணையாகவும் இருந்து வருகிறார்.

பிளவுபடுத்தும் பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் கனிவும், துணிவும், தெளிவும் மிக்க செயல்பாடுகளும் கொண்ட அன்னை சோனியா அவர்கள், நலமோடும் மகிழ்வோடும் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து, இந்தியத் திருநாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உகந்த வழிகாட்டிட வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close