/indian-express-tamil/media/media_files/2025/05/24/Pi6NiPOZsA2mH0s94Hgt.jpg)
டெல்லியில் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில், பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை நோக்கி பயணிக்கும்போது, மத்திய அரசு மாநிலங்களுடன் கூட்டாட்சி தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: Stalin’s message to Modi: To build a Viksit Bharat, states need their due, PM’s vision must accommodate diversity
அனைவருக்கும் அனைத்தும் என்ற இலக்கை நோக்கியே திராவிட மாடல் செயல்படுகிறது என்று குறிப்பிட்ட ஸ்டாலின், கடந்த நிதியாண்டில் 9.69% பொருளாதார வளர்ச்சியை தமிழகம் பதிவு செய்துள்ளது, இது நாட்டின் மிக உயர்ந்த வளர்ச்சிகளில் ஒன்று. 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் இலக்கை தமிழகம் கொண்டுள்ளது, இந்தியாவின் 30 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கிற்கு தமிழகம் கணிசமான பங்களிப்பை வழங்கும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
அதே சமயம், இது வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல; இது ஒரு அரசியல் கூற்றாகவும் இருக்கிறது. "அந்த இலக்கை அடைய, கூட்டாட்சி தர்மம் வலுவான அடித்தளமாக இருக்க வேண்டும். தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சி இலக்குகளை அடைய, மத்திய அரசு பாரபட்சமின்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்," என்று ஸ்டாலின் மத்திய-மாநில நிதி உறவுகளில் அதிகரித்து வரும் அழுத்தத்தை கவனத்தில் கொண்டு கூறியுள்ளார்.
சமக்ர சிக்ஷா அபியான் (SSA) திட்டத்தின் கீழ் நிதியை நிறுத்திய மத்திய அரசின் முடிவுக்கு அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த முதல்வர் ஸ்டாலின், பி.எம்.ஸ்ரீ திட்டத்துடன் இணைக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழகம் மறுத்ததை சுட்டிக்காட்டினார். மேலும், 2024-2025 ஆம் ஆண்டிற்கான சுமார் ரூ. 2,200 கோடி மத்திய நிதி தமிழகத்திற்கு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மற்றும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் படிக்கும் குழந்தைகளின் கல்வியை பாதிக்கிறது.
ஒரு மாநிலத்திற்கு வழங்க வேண்டிய மற்றும் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட நிதியை நிறுத்துவது, தாமதப்படுத்துவது அல்லது குறைப்பது கூட்டாட்சி தர்மத்திற்கு ஏற்புடையது அல்ல. 15வது நிதி ஆணையம் மத்திய அரசின் நிகர வரி வருவாயில் 41% மாநிலங்களுக்கு வழங்க பரிந்துரைத்திருந்தாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் உண்மையான பங்கு 33.16% மட்டுமே என்று வரிப் பகிர்வு போக்குகளையும் ஸ்டாலின் விமர்சனம் செய்து சுடு்டிக்காட்டியுள்ளார்.
ஒருபுறம், மத்திய அரசிலிருந்து குறைந்து வரும் வரிப் பகிர்வு மாநில நிதியை பாதிக்கிறது. மறுபுறம், மத்திய அரசு தொடங்கிய திட்டங்களுக்கு மாநிலங்கள் இணைந்து நிதி வழங்க வேண்டிய அதிகரித்த நிதிச்சுமை மாநில பட்ஜெட்டில் இரட்டை அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. "மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கை 50% ஆக உயர்த்த வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன், இது மட்டுமே நியாயமான நடவடிக்கையாகும்.
இருப்பினும், சமத்துவம், பாலின உள்ளடக்கம் மற்றும் புதுமையில் வேரூன்றிய வெற்றி கதையாக தமிழகத்தை சித்தரித்த ஸ்டாலின், 1.4 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பெண்களுக்கு உயர்கல்வியை ஆதரிக்கும் புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன், 40 லட்சம் இளைஞர்களை சென்றடையும் நான் முதல்வன் திறன் மேம்பாட்டு முயற்சி போன்ற முக்கிய நலத்திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.
இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41% தமிழகத்தில் பணிபுரிகின்றனர்.
பணியாற்றும் பெண்களுக்காக 694 விடுதிகளை நாங்கள் அமைத்துள்ளோம். கடந்த நான்கு ஆண்டுகளில், 30 புதிய தொழில் பூங்காக்களை நாங்கள் தொடங்கியுள்ளோம். பசுமை ஹைட்ரஜன் மற்றும் பிற வளர்ந்து வரும் துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறி வருகிறது என்று கூறியுள்ளார்.
ஏ.எம்.ஆர்.யு.டி (AMRUT) 2.0 திட்டத்திற்கு கூடுதலாக, உள்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு புதிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்திற்கும் அழைப்பு விடுத்த முதல்வர் ஸ்டாலின், காவேரி, வைகை மற்றும் தாமிரபரணி போன்ற நதிகளின் சுற்றுச்சூழல் மற்றும் ஆன்மீக மதிப்பை எடுத்துக்காட்டி, தூய்மையான நதிகள் திட்டத்தை முன்மொழிந்தார்.
கலாச்சார ரீதியாக, மத்திய அமைச்சகங்கள் மாநிலங்கள் தங்கள் திட்டங்களை ஆங்கிலத்துடன் தங்கள் சொந்த மொழிகளிலும் முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். தமிழகம் எங்கள் திட்டங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முன்வைக்க முடியும். "பிரதமரின் தொலைநோக்கை நாங்கள் பாராட்டுகிறோம், ஆனால் அந்த தொலைநோக்கு இந்தியாவின் பன்முகத்தன்மையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்."
பன்முகத்தன்மை மற்றும் சமமான கூட்டாண்மையில் கட்டப்பட்ட தேசிய ஒற்றுமைக்கான கோரிக்கையை வைத்த ஸ்டாலின், ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாகவும் கண்ணியத்துடனும் செழிக்கும்போது மட்டுமே, ஐக்கிய மற்றும் உள்ளடக்கிய இந்திய ஒன்றியம் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும். இந்த உறுதிப்பாட்டுடன் தமிழ்நாடு எப்போதும் நிற்கும். வாழ்க தமிழ்! முன்னேறுக தமிழ்நாடு! வளர்க இந்தியா என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.