திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான 'முரசொலி'யில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை இனி 'கழக செயல் தலைவர்' என்று குறிப்பிட்டு செய்திகள் வெளியாகும் என்ற தகவலுக்கு திமுகவின் ஆர்.எஸ். பாரதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
'முரசொலி'யில் திமுக தலைவர் கருணாநிதியை கலைஞர் என்று மட்டுமே குறிப்பிடுவார்கள். அதுபோல அனைத்துச் செய்திகள் மற்றும் விளம்பரங்களில் இன்று (ஜனவரி 31) முதல் முரசொலி நாளிதழில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் பெயருக்குப் பதிலாக 'கழக செயல் தலைவர்' என்றே குறிப்பிட வேண்டும்.
ஸ்டாலின் என்ற பெயர் இடம்பெறக் கூடாது என 'முரசொலி' நாளிதழ் அறிவித்துள்ளதாக நேற்று செய்தி வெளியானது. முரசொலியில் அனைத்துச் செய்திகள் மற்றும் விளம்பரங்களில் ஜனவரி 31 முதல் 'கழக செயல் தலைவர்' என்றே குறிப்பிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இன்று எம்.பி.யும், திமுக அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி இந்தச் செய்திக்கு மறுப்பு அறிக்கை விடுத்துள்ளார்.
அதில், "திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பெயருக்கு பதிலாக இனி 'கழக செயல் தலைவர்' என்றே குறிப்பிட வேண்டும் என்றும், 'ஸ்டாலின்' என்ற பெயர் இடம் பெறக் கூடாது என கழக நாளேடான 'முரசொலி' வெளியிடாத ஒரு செய்தியை, வெளியிட்டதாக சில நாளிதழ்கள் விஷமத்தனமான பொய்ச் செய்தியை வேண்டுமென்றே வெளியிட்டுள்ளன.
இதனை திமுக வன்மையாக கண்டிப்பதோடு, இதுபோன்ற செய்தியை முரசொலி வெளியிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று ஆர்.எஸ்.பாரதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.