முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு தொடர்பாக, கடந்த வாரம் தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தி, ‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடியை சந்திக்க’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், காவிரி பிரச்சனை தொடர்பாக பேச விரும்புவதாக, நேற்று முதலமைச்சர், ஸ்டாலினை செல்போனில் தொடர்புகொண்டு தெரிவித்தார். அதன்படி, இன்று காலையில் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சட்டப்பேரவை அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலரும் உடனிருந்தனர்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “காவிரி விவகாரத்தில் பிரதமர் சந்திக்க மறுப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினேன்.
அதற்கு, திங்கட்கிழமை வரை காத்திருக்கலாம் என முதலமைச்சர் கூறினார். பிரதமர் சந்திக்க மறுப்பதாக கூறி எம்பிக்கள் ராஜினாமா செய்யலாம் என்ற கருத்தை முன்வைத்தோம். காவிரி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம். காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தினரை பிரதமர் சந்திக்க மறுப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானம்.காவிரி விவகாரத்தில் பிரதமர் சந்திக்க மறுப்பதால் திமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய தயார்.”, என தெரிவித்தார்.
இந்நிலையில், ”முதலமைச்சர் தலைமையிலான குழுவை பிரதமர் சந்திக்க மறுப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது. நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பிறகு சந்திப்பதாக பிரதமர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”, என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.