Advertisment

தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம்; சோதனை ஓட்டம் நடத்த ஸ்டாலின் உத்தரவு

தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம்; கன்னடியன் வெள்ளப்பெருக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ள ஸ்டாலின் ஆணை

author-image
WebDesk
New Update
குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர்: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம்; கன்னடியன் வெள்ளப்பெருக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ள ஸ்டாலின் ஆணை

தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்பு திட்டத்திற்கு சோதனை ஓட்டம் நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், தென்மாவட்டங்களில் உள்ள ஏரிகள் தொடங்கி அணைகள் வரை கிடுகிடுவென நிரம்பி வருகிறது. இந்நிலையில் தாமிரபரணியின் உபரி நீரை வறண்ட பகுதிகளுக்கு திருப்பிவிட்டு, தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்தில் சோதனை ஓட்டம் நடத்திப் பார்க்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து முதலமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, ”கடந்த மார்ச் 2008-ல் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தபடி, தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலில் உபரியாக கலக்கும் 13,758 மில்லியன் கன அடி வெள்ளநீரில், கன்னடியன் (தாமிரபரணியின் 3-வது) அணைக்கட்டில் இருந்து 2765 கன அடி நீரை கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தை நான்கு நிலைகளாக செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு, அன்றைய முதலமைச்சர் கருணாநிதியால், 21.02.2009 அன்று இத்திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தற்போது, ​​முதல் மூன்று நிலைகளுக்கான பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு நான்காவது நிலைப்பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் 67.1 கி.மீ நீளத்திற்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8.10 கி.மீ நீளத்திற்கும், ஆக மொத்தம் 75.2 கி.மீட்டர் நீளத்திற்கு வெள்ளநீர்க் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தினால் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் (56933 ஏக்கர்) பாசன உறுதி பெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளும் பயன்பெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்கள், 177 குளங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்கள், 75 குளங்கள் பயன்பெறும்.

தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, இத்திட்டத்தில் உபரிநீரை கொண்டு செல்வது குறித்து, நீர்வளத்துறை அமைச்சரிடமும், நீர்வளத்துறை அலுவலர்களுடனும், தமிழ்நாடு முதலமைச்சர் கலந்தாலோசித்தார்கள். இந்த ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட முடிவின்படி, கன்னடியன் வெள்ளப்பெருக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதலமைச்சர் ஆணையிட்டார். இவ்வாறு உபரிநீர் திறக்கப்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளில் வாழும் விவசாயிகளின் நூற்றாண்டு கனவான இத்திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், வேளாண் பெருமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Mk Stalin Tirunelveli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment