கச்சத்தீவை மீண்டும் திரும்பப் பெறுவதற்கான அரசின் தனித் தீர்மானத்தை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில் கொண்டு வந்தார். அவர் முன்மொழிந்துள்ள தீர்மானத்தில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டி, இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களை போக்கி கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும். இதனை கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் மோடி இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டு கொண்டுவர வேண்டுமென்றும் இந்த பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்:-
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை, இந்திய மீனவர்கள் என்பதை மத்திய அரசு மறந்துவிடுகிறது. எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி மீனவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுகிறது. கச்சத்தீவை மாநில அரசு தாரை வார்த்தடாக தவறான புரிதல் உள்ளது. வேறு மாநில மீனவர்கள் இப்படி தாக்குதலுக்கு ஆளானால் மத்திய அரசு வேடிக்கை பார்க்குமா? என்று கேள்வி எழுப்பினார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஒரு மீனவர்கூட கைது செய்யப்படமாட்டார் என்று 2014 தேர்தலுக்கு முன்னதாக நரேந்திர மோடி சொன்னார்கள். ஆனாலும், இந்தத் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இலங்கையில் சில மாதங்களுக்கு முன்னால் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. ஏற்கெனவே இருந்தவர்கள் தோல்வியடைந்து, புதியவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். ஆனாலும், தமிழ்நாட்டு மீனவர்கள் நிலைமை மாறவில்லை; மீனவர்கள் மீதான தாக்குதல் ஓயவில்லை. பாரம்பரிய மீன்பிடி உரிமை கொண்ட நம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது தொடர்ந்து சிறைபிடிக்கப்படுகிறார்கள்; படகுகள் இலங்கை அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் 530 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுவரைக்கும் மீனவர்கள் கைது, தாக்குதல் குறித்து 74 கடிதங்களை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், பிரதமர் அவர்களுக்கும் எழுதியிருக்கிறேன்.
கச்சத்தீவு விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும், கச்சத்தீவை மாநில அரசுதான் இலங்கைக்கு அளித்தது போன்று ஒரு தவறான தகவலைப் பரப்பி அரசியல் செய்வது அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாகி விட்டது. ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக கட்சிகள் செய்யும் அதே தவறை ஒன்றிய அரசு செய்வது வருந்தத்தக்கது; ஏற்கமுடியாதது. கச்சத்தீவைப் பொறுத்தவரைக்கும், அந்தத் தீவைக் கொடுத்து, ஒப்பந்தம் போட்ட போதே முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். தமிழ்நாட்டு மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்படக் கூடாது என்று அழுத்தந்திருத்தமாக வாதிட்டு இருக்கிறார். அன்றைக்கிருந்த தி.மு.க. எம்.பி.-க்கள் இரா செழியன், எஸ்.எஸ்.மாரிச்சாமி ஆகியோர் நாடாளுமன்றத்திலே கடுமையாக எதிர்த்து இருக்கிறார்கள். அதையும் மீறி கச்சத்தீவு ஒப்பந்தம் 28.6.1974 அன்று கையெழுத்து ஆனவுடன், மறுநாளே அதாவது, 29.6.1974 அன்றே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் கூட்டி இதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி, அன்றையதினமே பிரதமருக்கும் கடிதம் எழுதியதாக ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.