சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு காரில் தருமபுரிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பயணித்தார்.
அவருக்கு அதியமான் கோட்டையில் கூடியிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது திடீரென அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் முதல்வரின் கார் சென்றது. காரிலிருந்து இறங்கிய ஸ்டாலின், காவல் நிலையத்திற்குள் சென்று, எஸ்.ஐ.,யின் இருக்கையில் அமர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பொது நாள்குறிப்பு, தினசரி பணிப் பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்த முதல்வர், செப். 28 அன்று பெறப்பட்ட புகார் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், முதல்வர் தனிப்பிரிவு மூலம் அனுப்பப்படும் புகார் மனுக்கள் மீதான விசாரணை முறை குறித்தும், முதல்வருக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கைக்காக காவல் நிலையங்களுக்கு திருப்பி விடப்படும் மனுக்கள் மீதான விசாரணை முறை குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, வாரவிடுப்பு சரியாக அமல்ப்படுத்தப்படுகிறதா என்பதையும் போலீசாரிடம் கேட்டறிந்தார். சுமார் 10 நிமிட ஆய்வை முடித்துக் கொண்டு முதல்வர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த ஆய்வின்போது, ஏடிஜிபி(சட்டம்-ஒழுங்கு) தாமரைக்கண்ணன், நுண்ணறிவுப்பிரிவு ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், சேலம் டிஐஜி மகேஸ்வரி, தருமபுரி எஸ்.பி கலைச்செல்வன், அதியமான்கோட்டை காவல் ஆய்வாளர் ரங்கசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil