முத்துராமலிங்க தேவரின் இன்று (அக்.30) 117வது ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வருடன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளார்களிடம் பேசிய ஸ்டாலின், "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை போற்றக் கூடிய பல திட்டங்களை செய்துள்ளோம். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரில் திமுக அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
மதுரையில் தேவர் சிலை மற்றும் பல இடங்களில் கல்லூரிகளை திறந்துள்ளோம். மதுரை மாநகரில் மாபெரும் வெண்கலச் சிலை, பசும்பொன் மண்ணில் நினைவில்லம், மேல்நீலிதநல்லூர் - கமுதி - உசிலம்பட்டி ஆகிய இடங்களில் மூன்று அரசு கலைக் கல்லூரிகள்,
மதுரை ஆண்டாள்புரத்தில், "முத்துராமலிங்கத் தேவர் பாலம்"-என்று பெயரிட்டோம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கல்வி அறக்கட்டளை, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினருக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 20 விழுக்காடு ஒதுக்கீடு, முத்துராமலிங்க தேவர் அரங்கம் திறப்பு என பசும்பொன்தேவர் புகழ் சேர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றியிருக்கிறோம் என்றார்.
தொடர்ந்து மீனவர்கள் பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து நாங்கள் கடிதம் எழுதிக்கொண்டு இருக்கிறோம். நான் டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் பிரதமரிடம் பேசியிருக்கிறேன். வெளியுறவுத் துறை அமைச்சரிடத்திலும் இதை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறோம். அவர்களும் அவ்வப்போது, நாங்கள் எழுதக்கூடிய கடிதத்திற்கு நடவடிக்கை எடுத்து, மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும், இது தொடர்ந்து இருந்துவருகிறது.
இதற்கு முடிவு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு இருக்கிறோம். அதில் எந்தவிதமான கருத்து மாறுபாடும் கிடையாது" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“