சென்னையில் மழைப் பாதிப்புகளைப் பார்வையிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தெரிவித்ததாவது, சென்னையில் ஒரே நாளில் 20 செ.மீட்டருக்கு அதிகமாக மழை பெய்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுமார் 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன; தொடர்ந்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி, வருவாய் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்ள கூறியுள்ளேன். எழும்பூர், கொளத்தூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தேன்; இன்று மாலை சென்னையின் தென் பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளேன். சென்னையில் 160 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன. மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு சென்று, தற்போது சென்னை திரும்ப நினைப்பவர்கள் இரண்டு நாட்கள் கழித்து பயணத்தை திட்டமிட வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil