2024 மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தின் அடுத்த அமர்வு சிம்லாவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மு.க. ஸ்டாலின் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், “எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் மாநிலத்தில் எந்தக் கட்சிகள் செல்வாக்கு மிக்கதாக திகழ்கிறதோ அந்தக் கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நம்பிக்கை அளிக்கிறது” என்றார்.
தொடர்ந்து, “பாஜக என்று சொல்வதால் ஏதோ ஒரு தனிப்பட்ட கட்சிக்கு எதிரான கூட்டமாக இன்று நடந்தது என்று நினைக்க வேண்டாம். ஒடுக்கப்பட்ட, ஏழை-எளிய மக்கள் காக்கப்பட வேண்டும் என்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக வேண்டும் எனப் பேசினேன்.
மேலும், மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் தமிழ்நாட்டில் வெற்றி பெற உதவியது; இதேபோல, தேசிய அளவில் ஒற்றுமை அமைய வேண்டும் என்று பேசினேன்” என்றார்.
பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே சார்பில் அவரது மகன் ஆதித்ய தாக்கரே எனப் பலர் கலந்துகொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“