Stalin reveals two secret of success to school students in College dream function: சென்னையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்வான “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்து மாணவர்களிடம் வெற்றியின் இரண்டு ரகசியங்களை வெளிப்படுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நான் முதல்வன்” என்ற திட்டத்தின் கீழ், 12ஆம் வகுப்பு படித்தவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும், கல்லூரி கனவு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
இதையும் படியுங்கள்: ஜெ. மரண வழக்கு; ஆறுமுகசாமி ஆணையம் ஆகஸ்ட் 3ல் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவு
இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்த மாநிலத்தின் முதலமைச்சராக மட்டும் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துவிடவில்லை. உங்களையெல்லாம் என்னுடைய சொந்தப் பிள்ளைகள் என்று கருதி அந்த உணர்வோடு உங்களை நான் வாழ்த்த வந்திருக்கிறேன். அரசு அதிகாரிகள்கூட இதனை ‘வழிகாட்டும் நிகழ்ச்சி’ என்று சொன்னார்கள். நம்மை விட, இந்தக் காலத்துப் பிள்ளைகள் மிக மிக விவரமானவர்கள். நான் சொல்வது உண்மைதானே… அதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் தானே. எனவே உங்களுக்கு எல்லாமே தெரியும். ஏனென்றால், எல்லோரும் கையிலும் இப்போது மொபைல் போன் வந்துவிட்டது. இல்லை… இல்லை… உலகமே உங்கள் விரல்நுனிக்கு இப்போது வந்துவிட்டது.
பன்னிரண்டாம் வகுப்பை முடித்தோம் – கல்லூரியில் சேர்ந்தோம் – பட்டம் வாங்கினோம் – வேலையில் சேர்ந்தோம் -கைநிறைய சம்பளம் வாங்கினோம் என்பதோடு உங்கள் கடமை முடிந்துவிடுவது இல்லை.
எத்தகைய ஆற்றல் படைத்தவர்களாக நீங்கள் உயர்ந்தீர்கள், அத்தகைய ஆற்றலை வைத்து இந்தச் சமூகத்தை எப்படி மேம்படுத்த முயன்றீர்கள் என்பதுதான் முக்கியம். இதுதான், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் உண்மையான நோக்கம்.
நாம் மிகவும் விரும்பும் துறையைத் தேர்ந்தெடுப்பது மற்றும் கடின உழைப்பு ஆகியவை நம்முடைய வெற்றிக்கான முக்கிய இரண்டு காரணிகள். உலகெங்கிலும் உள்ள வெற்றிகரமான நபர்களைப் பார்க்கும்போது இந்த இரண்டு காரணிகளும் தனித்து நிற்கின்றன.
தமிழ்நாட்டு மாணவர்களும், பெற்றோர்களும் பொறியியல், மருத்துவம் ஆகிய துறைகளைத் தாண்டி பல்வேறு படிப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பொறியியல் மற்றும் மருத்துவம் சிறந்த படிப்புகள். ஆனால், கலை, அறிவியல், சட்டம் போன்ற துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதால், இந்த இரண்டு படிப்புகளையும் பற்றி மட்டும் கனவு காண்பதை நிறுத்தக் கூடாது.
நாட்டின் முதல் 100 கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்தால், 30 கல்லூரிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. அதனால், கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் தனிப்பட்ட திறன் கொண்டவர்கள் மட்டுமே பட்டப்படிப்புக்குப் பிறகு பிரகாசிக்க முடியும்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன், தலைமைச் செயலாளர் வி.இறையன்பு, டி.ஜி.பி சைலேந்திரபாபு போன்ற தமிழகத்தின் சிறந்த சாதனையாளர்கள் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். தமிழ் வழியில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற முடியும் என்பதற்கு இவர்கள் தான் எடுத்துக்காட்டு.
அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் நமது திராவிட இயக்கம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அதற்கான வாசற்படிதான் சமூகநீதி! அந்தச் சமூகநீதியை, இடஒதுக்கீட்டு உரிமையை சட்டமாக்கி வித்திட்டது, என்று ஸ்டாலின் பேசினார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் ஜூன் 29 முதல் ஜூலை 2 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படவுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil