திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் என்ற தலைப்பில் முதல்வருக்கு பாராட்டு விழா தஞ்சையில் நடைபெற்றது.
இந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “கருணாநிதிக்கும் எனக்கும் திராவிட கழகம் தான் தாய் வீடு. திராவிட கழக தலைவர் அழைத்தால் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்வேன்.
ஏனென்றால் இன்றைக்கு என்னை காத்துக் கொண்டிருப்பவரும், "மிசா" காலத்தில் இருட்டறையில் எனக்கு தைரியம் கொடுத்தவர்தான் திராவிட கழக தலைவர்.
தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் இல்லாத நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருப்பவர் ஆசிரியர் வீரமணி என கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார். என்னை பொருத்தவரை கருணாநிதி இல்லாத இந்த நேரத்தில் கொள்கை வழிகாட்டியாக எனக்கு இருப்பவர் வீரமணி தான்.
நமது பாதையை தீர்மானிப்பது பெரியார் திடல் தான் என பலமுறை குறிப்பிட்டு இருக்கிறேன். அதைத்தான் நேற்றும் சொன்னேன், என்றும் சொல்லுகிறேன், நாளையும் சொல்வேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய நேரத்தில், அறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள். திராவிட கழகத்திற்கு போட்டியாக அல்ல அவர்களின் கொள்கையை வேறு ஒரு பாதையில் சொல்வதற்காக தான் கொள்கையை செயல்படுத்துவதற்காகத்தா ன் அண்ணா மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். திகவும் திமுகவும் இரட்டை குழல் துப்பாக்கி என்று பேரறிஞர் அண்ணா கூறினார்.
திகவும் திமுகவும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என கருணாநிதி கூறினார்.
என்னை பொருத்தவரையில், திகவும் திமுகவும் உயிரும் உடலும் போலத்தான். உயிரும் உடலும் இணைந்து இயங்குவது போல இந்த இனத்திற்காக நாம் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா நடத்தக்கூடிய முழு தகுதியும், கடமையும் திகவுக்கு உண்டு. பள்ளி பாடத்தில் தோற்றேன் ஆனால் பெரியார் பள்ளிக்கூடத்தில் வெற்றி பெற்று விட்டேன் என கருணாநிதி பெருமைப்பட்டுக் கொண்டார்.
இந்தியாவை காக்க,சமத்துவம்,சகோதரத்துவம் காக்க,சமூக நீதியை காக்க எனது வாழ்க்கையை, முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன் என்பது தான்.எனக்கு திராவிட கழகம் நடத்திய பாராட்டு விழாவில்,நான் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி.எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்துவேன்” என்றார்.
செய்தியாளர் க சண்முகம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“