scorecardresearch

உதயநிதி உடன் வெளியே சென்றால் அண்ணன், தம்பியானு கேட்பாங்க … ஸ்டாலின் ஃபிட்னஸ் சீக்ரெட்!

சென்னையில், ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், என் மகன் உதயநிதியுடன் எங்கேயாவது வெளிநாடு போனால், ரெண்டு பேரும் அண்ணன் தம்பியா என்று கேட்பார்கள்.” என்று ஜாலியாக பேசினார். மேலும், தனது ஃபிட்னஸ் சீக்ரெட்டையும் கூறினார்.

உதயநிதி உடன் வெளியே சென்றால் அண்ணன், தம்பியானு கேட்பாங்க … ஸ்டாலின் ஃபிட்னஸ் சீக்ரெட்!

உடல் ஆரோக்கியத்தையும் உடற்பயிற்சியையும் ஊக்குவிப்பதற்காக வாகனம் இல்லா போக்குவரத்தை மேம்படுத்தவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா, சென்னை பெருநகர மாநகராட்சி இணைந்து ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்நிகழ்வை ‘சிங்கார சென்னை 2.O’ திட்டம் மூலம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அண்மையில் தொடங்கிவைத்தார்.

சென்னையில் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் சுமார் 800 முதல் 1000 மீட்டர் வரையிலான தேர்தேடுக்கபட்ட சாலையில் காலை 6 முதல் 9 மணி வரை ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த சாலைகளில் 3 மணி நேரத்திற்கு முழுவதுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நிரலாக, பொதுமக்கள் இணைந்து விளையாடுவது, நடனமாடுவது, பாட்டு பாடுவது, இசைக் கச்சேரி, இலவச சைக்கிள் பயணம், ஸ்கேட்டிங், கயிறு இழுத்தல், கராத்தே, சிலம்பம் சுற்றுதல், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் விரும்பிய விளையாட்டை விளையாடலாம்; ஆடலாம், பாடலாம், திறமைகளை வெளிப்படுத்தி காலையில் தெருக்களில் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

அந்த வகையில், சென்னை அண்ணா நகரில் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி 9 மணி வரை நடைபெற்றது.

சென்னை தினத்தையொட்டி, நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடினார். மேலும், அவர் பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “சென்னை பெருநகர மாநகராட்சி, சென்னை மாநகரக் காவல்துறை மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய மூன்று அமைப்புகளும் ஒன்றிணைந்து, ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் அதாவது ‘மகிழ்ச்சியான தெருக்கள்’ என்ற தலைப்பில், தொடர்ந்து 3 மாதங்களாக இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள். சென்ற வாரம் நான் இந்த நிகழ்ச்சிக்கு வர ஒத்துக்கொண்டேன். காலையில் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால், நான் வர முடியாத ஒரு சூழ்நிலை ஆகிவிட்டது. ஆனால், இந்த தொற்றில் இருந்து நான் இரண்டு மூன்று நாட்களில் விடுபட்டேன். அவ்வளவு விரைவக விடுபட்டதற்கு என்ன காரணம் என்று கேட்டீர்கள் என்றால், என்னுடைய உடல் அதற்கு காரணமாக இருந்தது. என்ன அந்த உடல் காரணமாக இருந்தது என்றால், எனக்கு வயது 69, கிட்டத்தட்ட 70 வயது. ஆனால், இங்கே இருப்பவர்கள் பார்த்தீர்கள் என்றால் நம்பமாட்டீர்கள். இன்னும் வெளிப்படையாக சொல்கிறேன். நானும் என்னுடைய மகனும் எங்கேயாவது வெளிநாடுகளுக்கு சென்றால் ரெண்டு பேரும் அண்ணன் தம்பிகளானு கேட்பார்கள். நான் பெருமைக்காக இதை சொல்லவில்லை. பல நேரங்களில் நடந்தது உண்டு.

எதற்காக நான் இதை சொல்கிறேன் என்றால், அந்த மாதிரி என்னுடைய உடல்நிலைக்கு, எனக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் என்னுடைய உடல்நிலையைப் பேணிப் பாதுகாக்க அக்கறை எடுத்துக்கொள்வேன்.

கவிஞர் வைரமுத்து ஒரு அழகான கவிதை சொல்வார். பசியோடு உண்ண வேண்டும். பசியோடு எழுந்து வந்துவிட வேண்டும் என்று ஒரு அழகான கவிதையில் சொல்லி இருக்கிறார். ஆக வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. எதையும் சாப்பிடாமலும் இருந்துவிடக்கூடாது. என்ன சாப்பிட்டாலும் உடற்பயிற்சி அவசியம் செய்ய வேண்டும். ஜிம், யோகா, நடைபயிற்சி ஆகியவற்றை செய்கிறேன். உடல்நலத்தை பேணி பாதுகாத்து வந்தால் எந்த கவலை, டென்சன் வந்தாலும் அதில் இருந்து விடுபடலாம். எனவே, நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடற்பயிற்சி செய்யுங்கள்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Stalin says fitness secret and in foreigners comments udhayanidhi and stalin are look like brothers