Stalin says Rahul Gandhi is a right person to compete against BJP, பா.ஜ.க.,வின் மத வெறுப்பு அரசியலை ராகுல் காந்தி எதிர்த்து வருகிறார் - ஸ்டாலின் | Indian Express Tamil

பா.ஜ.க.,வின் மத வெறுப்பு அரசியலை ராகுல் காந்தி எதிர்த்து வருகிறார் – ஸ்டாலின்

பா.ஜ.க.,வை தேர்தலுக்காக மட்டும் ராகுல் காந்தி எதிர்க்கவில்லை. கொள்கை ரீதியாகவும் எதிர்க்கிறார். அதனால்தான் ராகுல் காந்தியை பா.ஜ.க எதிர்க்கிறது. இது ராகுல் காந்தியின் வலிமையை காட்டுகிறது – மு.க. ஸ்டாலின்

பா.ஜ.க.,வின் மத வெறுப்பு அரசியலை ராகுல் காந்தி எதிர்த்து வருகிறார் – ஸ்டாலின்

பா.ஜ.கவை எதிர்க்க ராகுல் காந்தி சரியான நபர். தேசிய அளவில் காங்கிரஸ் முக்கியத்துவத்தை இழக்கவில்லை. அது மீண்டு வருகிறது என பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் தேசிய அளவில் கூட்டணி கணக்குகள் மாறி வருவதாக, கடந்த சில நாட்களாக பல்வேறு ஊகங்கள் வெளி வந்தன.

இதையும் படியுங்கள்: வந்தே பாரத் ரயில்: தேர்தல் வந்தால்தான் தென் மாவட்டங்களுக்கு வருமா?

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் குறித்தும், காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி குறித்தும் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அந்தப் பேட்டியில், காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் அதனுடைய மதிப்பை இழந்துவிட்டதாக நான் கருதவில்லை. காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக சோனியா காந்தி எடுத்த சில முடிவுகளுக்கு இப்போதுதான் பலன் கிடைக்க தொடங்கி உள்ளது. மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கட்சியை மீண்டும் வலிமையான நிலைக்கு கொண்டு வர தனது அனுபவத்தை பயன்படுத்தி வருகிறார்.

சகோதரர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பாரத் ஜோடோ யாத்திரையின் தாக்கம், மாற்றத்தை உணர முடிகிறது. காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி மீண்டும் இந்தியாவில் தனது பழைய டிராக்கிற்கு வந்துள்ளது. ராகுல் காந்தி நம்பிக்கை அளிக்க கூடிய இளம் தலைவர். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி வைக்கும் கருத்துக்கள் மிகவும் வலிமையான கருத்துக்கள். அவர் பல விவகாரங்களில் ஆழமான, தீர்க்கமான நிலைப்பாடுகள் கொண்டுள்ளார். அவர் தனது கொள்கையில் உறுதியாக இருக்கிறார்.

இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை பண்பை அவர் மதிக்கிறார். மதவெறுப்பு அரசியலை ராகுல் காந்தி எதிர்த்து வருகிறார். ஒரு மொழியை திணிப்பதை அவர் எதிர்க்கிறார். அவரின் இந்தக் கொள்கைகள் பா.ஜ.க.,வின் கொள்கைகளுக்கு எதிரானவை. பா.ஜ.க.,வை தேர்தலுக்காக மட்டும் ராகுல் காந்தி எதிர்க்கவில்லை. கொள்கை ரீதியாகவும் எதிர்க்கிறார். அதனால்தான் ராகுல் காந்தியை பா.ஜ.க எதிர்க்கிறது. இது ராகுல் காந்தியின் வலிமையை காட்டுகிறது. இந்த குணங்களே பா.ஜ.க.வின் குறுகிய மனப்பான்மை அரசியலுக்கு அவரை மாற்று மருந்தாக ஆக்கியுள்ளது.

நமது அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய போது இருந்த கொள்கைகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது. இந்த அரசியலைப்பு சட்டத்தை காக்க வேண்டும் என்றால் அதற்கு தேசிய அளவில் கூட்டணி அமைக்க வேண்டும். அந்த கூட்டணியில் காங்கிரஸூம் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்கனவே நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறோம். அந்த கூட்டணி வெற்றிகரமான கூட்டணி என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

இவ்வாறு அந்த பேட்டியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Stalin says rahul gandhi is a right person to compete against bjp