Advertisment

தமிழ்நாட்டில் சி.ஏ.ஏ சட்டம் நடைமுறைப் படுத்தப்படாது - ஸ்டாலின் அறிவிப்பு

மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட, தமிழக அரசு எவ்வகையிலும் இடமளிக்காது – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Cyclone Michaung TN CM MK Stalin gave one month salary to Relief Fund Tamil News

மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட, தமிழக அரசு எவ்வகையிலும் இடமளிக்காது – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மத்திய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (CITIZENSHIP AMENDMENT ACT (CAA) இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisment

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, நமது நாட்டில் ஏற்கனவே இருந்த 1955 குடியுரிமை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு கடந்த 2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் (CAA) கொண்டு வந்தது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில், 5 ஆண்டுகள் கழித்து குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று மாலை (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

இதற்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இந்தச் சட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படாது என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் மத்திய பா.ஜ.க அரசு இருந்து வரும் வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அவசர கதியில் நேற்று அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, மொழி, இன, மதம் மற்றும் வாழ்விட சூழல் ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும், ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் நலனுக்கும், இந்திய தாய்த்திருநாட்டின் பன்முகத்தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும், முற்றிலும் எதிரானதாகும். அதுமட்டுமல்ல, சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம்.

இதன் காரணமாகத் தான், தி.மு.க அரசு அமைந்தவுடனயே, அதாவது, கடந்த 8.9.2021 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அரசின் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, அதனை நிறைவேற்றி, இச்சட்டத்தினைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி, மத்திய அரசுக்கு அதனை அனுப்பி வைத்தோம். தமிழ்நாட்டைப் போலவே பல்வேறு மாநிலங்களும் இதனை எதிர்த்து குரல் கொடுத்து வந்துள்ளன.

இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிப்பதற்காக, மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன், தேர்தல் அரசியலுக்காக, இந்தச் சட்டத்தை தற்போது, நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதோ என கருத வேண்டியிருக்கிறது.

இந்திய மக்கள் இடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகைச் செய்யும் இந்தச் சட்டத்தால், எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன், ரத்து செய்யப்பட வேண்டியது என்பது தான் இந்த அரசின் கருத்தாகும். எனவே மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட, தமிழக அரசு எவ்வகையிலும் இடமளிக்காது.  இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும், எந்தவொரு சட்டத்திற்கும், தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Caa CM stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment