scorecardresearch

’ஹிந்தியா அல்ல’, இந்தியா தான்; தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின்

இந்தி தினத்திற்குப் பதில் ‘இந்திய மொழிகள் நாள்’ எனக் கொண்டாடி கலாசாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்துங்கள் – முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

’ஹிந்தியா அல்ல’, இந்தியா தான்; தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின்
Tamil news updates

தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை அலுவல் மொழிகளாக ஆக்க வேண்டும் என்றும் இந்தி தினத்திற்கு பதிலாக இந்திய மொழிகள் நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் நாள் ‘இந்தி திவாஸ்’ என்ற பெயரில் இந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது.

இதையும் படியுங்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதியில் வீடு மனைகள் வாங்க விற்க திடீர் தடை? நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

அந்த விழாவில் பேசிய இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள், “நமது கலாசாரம், வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள அலுவல் மொழியான இந்தியை நாம் கற்க வேண்டும்” என்றும், “நாட்டின் ஆட்சி நிர்வாகம், ஆராய்ச்சி ஆகியவை நமது உள்ளூர் மொழி மற்றும் அலுவல் மொழிகளில் நடக்க உறுதியேற்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு மொழிக்குரிய நாளில் அதன் பெருமைகளையும் சிறப்புகளையும் எடுத்துரைப்பது இயல்பானது. ஆனால், கலாசாரத்தையும் வரலாற்றையும் புரிந்துகொள்ள இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்திய ஒன்றியத்தின் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்கிற பண்பாட்டிற்கு நேர் எதிரானது.

இந்தியாவின் வரலாறு பண்பாடும் இந்தி மொழியில் புதைந்திருக்கவில்லை. இந்தி என்கிற மொழி உருவாவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழை முதன்மை மொழியாகக் கொண்ட திராவிட மொழிக் குடும்பமும், அதன் பண்பாட்டு விழுமியங்களும் இன்றைய இந்திய ஒன்றிய நிலப்பரப்பையும் அதன் எல்லைகளையும் கடந்து பரவியிருந்ததை வரலாற்றாசிரியர்கள் பலரும் எடுத்துக் காட்டியுள்ளனர்.

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் அவர்களும் இதன் அடிப்படையில் தனது ஆய்வு முடிவுகளைப் பதிவு செய்துள்ளார்.

இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்பதே வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அப்போதுதான் உண்மையான கலாசாரத்தையும் வரலாற்றையும் அறிந்து கொள்ள முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தைகைய சிறப்பு வாய்ந்த தமிழையும் மற்ற மொழிகளையும் பின்னுக்குத் தள்ளி இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்கிற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும். அந்த ஆதிக்க உணர்வை எதிர்த்து தாய்மொழி காத்திடத் தீக்குளித்து தங்களின் இந்த அன்னைத் தமிழுக்கு ஈந்த தியாக வரலாற்றைக் கொண்டது எங்கள் தமிழ்நாடு.

இந்தி சட்டப்படியான தேசிய மொழியும் அல்ல, அது மட்டுமே ஆட்சி மொழியும் அல்ல. இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக இந்தி உள்ளது. அதுபோலவே, இணை அலுவல் மொழியாக ஆங்கிலம் உள்ளது. மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள் இந்தியை உயர்த்திப் பிடிப்பதற்காக, ‘உள்ளூர் மொழி’களையும் தனக்குக் கூட்டாளியாக சேர்த்துக் கொண்டு பேசினார்.

இந்தி பேசும் மாநிலங்கள் என சொல்லப்படும் பகுதிகளில் பேசப்பட்டு வந்த மைதிலி, போஜ்புரி, சந்தாலி, அவதி உள்ளிட்ட பல மொழிகள் இந்தி மொழியின் ஆதிக்கத்தால் அழிவின் விளிம்பில் இருப்பதை மொழி அறிஞர்கள் ஆய்வுப்பூர்வமாக எடுத்துக் காட்டியுள்ளனர். அந்த மொழிகளை மீட்க, உள்ளூர் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய நிலை.

அலுவல் மொழியான இந்தியின் ஆதிக்கத்திலிருந்து தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் தனித்தன்மை மிக்க மொழிகளைக் காப்பதற்காக அரசியல் சட்டத்தின் வழியே போடப்பட்ட வேலிதான் இணை அலுவல் மொழி என்கிற ஆங்கிலம்.

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிதர் ஜவகர்லால் நேரு அளித்த உறுதிமொழியின் காரணமாக அந்த வேலி இன்றளவும் வலுவாக இருப்பதால் பல்லாயிரம் ஆண்டுகளாக இலக்கண -இலக்கிய வளத்துடன் செழித்து வளர்ந்து நிற்கும் செம்மொழியாம் தமிழ்மொழியை ஆதிக்க மொழி ஆடுகளால் மேய முடியவில்லை.

உள்ளூர் மொழிகள் மீது ஒன்றிய அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால் சமஸ்கிருதம் – இந்தி மொழிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதிக்கும், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு ஒதுக்கப்படும் நிதிக்கும் உள்ள மலையளவு வேறுபாட்டினை உணர்ந்து, அதனை சமன்படுத்துவதே சரியான நடவடிக்கையாக இருக்கும்.

அதற்கு மாறாக, தேசியக் கல்விக் கொள்கை வழியாக இந்தி – சமஸ்கிருத மொழியைத் திணிப்பதற்கான முயற்சிகளிலேயே ஒன்றிய அரசு முனைப்பாக இருக்கிறது.

இது ஒருமைப்பாடு மிக்க இந்தியா. அதனை ‘ஹிந்தி’யா என்ற பெயரில் பிளவுபடுத்திப் பார்க்கும் முயற்சிகள் வேண்டாம் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். உள்ளூர் மொழிகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தற்போது இடம்பெற்றுள்ள 22 மொழிகளில், உங்கள் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் உள்ளூர் மொழிகள் இந்திக்கு இணையாக, ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக விரைவில் அறியப்படும். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழிகளாக்கி, இந்தி தினத்திற்குப் பதில் ‘இந்திய மொழிகள் நாள்’ எனக் கொண்டாடி கலாசாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்துங்கள் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Stalin slams amit shah on hindi and demands tamil as official language