/indian-express-tamil/media/media_files/2024/12/24/2aqk74VKQxHGc7QWTN4w.jpg)
பெரியாரின் 51-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை பெரியார் திடலில் பகுத்தறிவு எணினி (டிஜிட்டல்) நூலகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் துரை முருகன், சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, திராவிடர் கழக தலைவர் வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஒரு பகுதியாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கைத்தடி பரிசாக வழங்கப்பட்டது. இதனை திராவிடர் கழக தலைவர் வீரமணி வழங்கினார். இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது, "கி. வீரமணி அளித்த கைத்தடி பரிசுக்கு ஏதும் ஈடாகாது. திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்பவர்களுக்கு இந்த கைத்தடி ஒன்றே போதும். தமிழினம் சுயமரியாதை பெற வாழ்நாளெல்லாம் உழைத்தவர் பெரியார்.
பெரியார் தான் வாழ்ந்த காலத்தில் பேசிய முற்போக்கு கருத்துகளுக்காக பழமைவாதிகளிடமிருந்து பல எதிர்ப்புகளை சந்தித்தார். ஊருக்கு செல்ல தடை, பேசுவதற்கு, எழுவதற்கு தடை, கோயிலுக்கு செல்ல தடை, பத்திரிகை நடத்த தடை என பல வகையாக பெரியாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அத்தனை தடைகளையும் தகர்த்து பெரியார் நம் மனதிற்குள் நுழைந்திருக்கிறார். பெரியார் மறைந்து 50 ஆண்டுகளை கடந்த பின்னரும் அவரை புகழ்ந்து கொண்டிருக்கிறோம். அவரது வரலாற்றை கூறுகிறோம். இதுவே பெரியாரின் தனித்தன்மை. பெரியார் என்றும் வாழ்பவர் என்ற நிலையை, கி. வீரமணி உருவாக்கியிருக்கிறார். பெரியாரிடம் கற்ற பாடத்தை, அவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இன்று பெரியாரை உலகமயமாக்கி, உலகத்தின் பொது சொத்தாக கொண்டு சேர்த்திருக்கிறோம். இந்த நூலகத்தை சிறப்பாக உருவாக்கியவர்களுக்கு வாழ்த்துகள். 1974-ஆம் ஆண்டு முதலமைச்சராக கருணாநிதி இருந்த போது, இதே இடத்தில் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை திறந்து வைத்தார். இன்று டிஜிட்டல் நூலகத்தை நான் முதலமைச்சராக தொடங்கி வைத்திருக்கிறேன்" என ஸ்டாலின் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.