உலக அளவில் பெரும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் இன்று (ஜனவரி 7) காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில் 450-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளும், 30,000-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ”மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரையும் வரவேற்கின்றேன். பொதுவாக நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது கோட் சூட் அணிவது வழக்கம். ஆனால், இன்று அனைத்து வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளதால், நான் கோட் சூட் அணிந்து வந்திருப்பது பொருத்தமாக இருக்கிறது. சென்னையில் காலையில் இருந்து மழை பெய்கிறது. அதுபோலவே முதலீடும் மழையாக பெய்யும் என்று நம்புகின்றேன். மாநாட்டை தலைமையேற்று நடத்தும் மத்திய மந்திரி பியூஸ் கோயலை மனதார பாராட்டுகிறேன்.
உலகம் முழுவதும் வந்திருக்கும் எனது அருமை சகோதர, சகோதரிகளே! நீங்கள் அனைவரும் சமத்துவத்தைப் போற்றிய வள்ளுவரும், கணியன் பூங்குன்றனாரும் பிறந்த மண்ணுக்கு வந்திருக்கிறீர்கள். பல வரலாற்றுப் பெருமைகளையும், புகழையும் கொண்ட தமிழ்நாட்டுக்கு வருகை தந்திருக்கிறீர்கள். உங்களை நான் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மாநிலத்தின் முதலமைச்சராக மட்டுமின்றி, உங்கள் சகோதரனாக வருக, வருக, வருக என நான் வரவேற்கிறேன்.
தொழில் துறை மேன்மையும், தனித்த தொழில்வளமும் கொண்ட மாநிலம்தான், தமிழ்நாடு! பண்டைய காலத்தில் இருந்து கடல் கடந்தும் வாணிபம் செய்தவர்கள்! அதனால்தான், "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற தொழிலை ஊக்குவிக்கும் பழமொழி உருவானது! இந்தியாவுக்கு பல்வேறு வகைகளில் தமிழ்நாடு, முன்மாதிரி மாநிலம்! 1920 ஆம் ஆண்டு 'தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு' எனப்படும் தொழிலதிபர்கள் அமைப்பு தொடங்கப்பட்டது.
முதலீட்டாளர்களை ஈர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த 2.5 ஆண்டுகளில் பெரும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 200 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும் கடந்த 2 ஆண்டுகளில் பல தொழில் கொள்ளைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட தமிழ்நாடு ஆகும். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவு பாதையில் தமிழ்நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது இந்த பொருளாதார மாநாட்டின் மூலம் மேலும் பொருளாதாரம் உயரும் என்று நம்புகின்றேன். தலைமைத்துவம், நீடித்த நிலைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என முதலீட்டாளர்களின் முதல் மாநிலம் என்ற சாதனையை தமிழ்நாடு படைத்துள்ளது. மாநிலத்தின் முதலீடு ஈர்ப்பு திறனைக் காண்பிக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
தொழில்மயமாக்கல் அத்தியாயத்தில் மகத்தான வளர்ச்சியாக முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளது. இந்தியாவின் பொருளாதார கொள்கையில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆட்சியின் மீது நல்லெண்ணம், சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால் இங்கு முதலீடுகள் குவிகின்றன. 2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல் தொழில்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இரண்டரை ஆண்டுகளில் 200 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியை நாம் இலக்காகக் கொண்டுள்ளோம். முதலீடு செய்வதற்கான அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் உள்ளது.
இந்த மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அவர்களையும் தொழில் துறை செயலாளர் அருண்ராய் அவர்களையும் - அனைத்துத் துறைகளைச் சார்ந்த அதிகாரிகளையும் அரசு உயர் அலுவலர்களையும் என அனைவரையும் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!
உலக நாடுகளை உள்ளடக்கிய இந்த நிகழ்வில், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகள் பங்குதாரர் நாடுகளாக இணைந்துள்ளன. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டார்கள். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.